தி கேரளா ஸ்டோரியை தொடர்ந்து, கொடுங்கோலன் திப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் பற்றிய திரைப்படம் ‘திப்பு’ என்கிற பெயரில் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தலைமைப் பொறுப்பில் இருந்த இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், அவர்களது ஆட்சி காலத்தில் நடந்த கொடுமைகள், கொடூரங்களை மறைத்தும், ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து மன்னர்களின் வீரதீரத்தை மறைத்தும், திரித்தும் வரலாற்றை மாற்றி எழுதி விட்டார்கள். இதன் காரணமாக, இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள் நமக்குத் தெரியாமலேயே போய் விட்டன. இதை வெளிக்கொண்டு வருவதற்கும் யாரும் இல்லை. காரணம், அப்போதிருந்த அரசாங்கள் அப்படி இருந்தன. ஆனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களுக்கு உண்மையான வரலாறை உணர்த்த வேண்டும். ஆகவே, வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதையடுத்து, மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் காலத்தில் நடந்த அநியாயங்கள், அக்கிரமங்களை சிலர் தைரியமாக சினிமாவாக எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி, ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளால் ஹிந்து பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை விவரித்து, தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்கிற படத்தை எடுத்து வெளியிட்டார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, ஹிந்து மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நம் நாட்டில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்த, நடக்கும் அநியாயங்கள், இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக பல இயக்குனர்களும் துணிச்சலாக சினிமாவாக எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில், ஹிந்தி திரைப்பட இயக்குனர் சுதீப்டோ சென், கேரளாவில் நடந்த, நடக்கும் லவ்ஜிகாத் மத மாற்றம், ஐ.எஸ்.ஐ.எஸ். ஆள்சேர்ப்பு குறித்து தி கேரளா ஸ்டோரி என்கிற தலைப்பில் திரைப்படம் எடுத்தார். இப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. தவிர, இதுவரை ஹிந்து மதத்தில் இருக்கும் நம்பிக்கைகளை மூடநம்பிக்கை என்று குறிப்பிட்டு படம் எடுத்து வந்த இயக்குனர்களுக்கு மத்தியில், தற்போது இஸ்லாத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள் குறித்த படங்களையும் எடுத்து துணிச்சலாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் வெளியான புர்கா படம் இஸ்லாத்தின் இன்னொரு முகத்தை வெளிச்சம்போட்டு காட்டியது. அதேபோல, முஸ்லீம் மதத்தின் கட்டுப்பாட்டை மீறி வேலைக்குச் செல்லும் பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஃபர்ஹானா என்றொரு படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
இந்த நிலையில்தான், மொகலாய மன்னன் கொடுங்கோலன் திப்பு சுல்தான் செய்த அராஜகங்களை மையமாக வைத்து “திப்பு” என்கிற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகி வருவது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்த முன்னோட்ட வீடியோ நேற்று வெளியானது. இதில், திப்பு சுல்தான் 8,000 ஹிந்து கோயில்கள் மற்றும் 27 தேவாலயங்களை அழித்தது, 4 லட்சம் ஹிந்துக்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியது மற்றும் மாட்டிறைச்சி உண்ணும்படி கட்டாயப்படுத்தியது, 1 லட்சம் ஹிந்துக்களை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது, கோழிக்கோடு ஏரியாவில் 2,000-க்கும் மேற்பட்ட பிராமண குடும்பங்கள் அடியோடு அழித்தது ஆகியவை குறித்து விவரிக்கிறது. 50 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவின் பின்னணியில் எரியும் கோயில்கள் மற்றும் முன்புறத்தில் திப்பு சுல்தானின் உருவப்படத்துடன் முடிவடைகிறது.
நிறைவாக, திப்பு சுல்தான் முகத்தில் கறை படிந்திருப்பதுபோல் காட்டப்படுகிறது. இப்படம் ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை ராஷ்மி ஷர்மா தயாரிக்க, சந்தீப் பவன் சர்மா இயக்கி இருக்கிறார். இவர், சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை “சுதந்திரிய வீர் சாவர்க்கர்” என்ற தலைப்பில் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு அடங்கிய “அடல்” திரைப்படத்தையும் இயக்கு வருகிறார்.
திப்பு சுல்தான் படம் மற்றும் கதை பற்றி இயக்குனர் பவன் ஷர்மா கூறுகையில், “திப்பு சுல்தான் பற்றி பள்ளிகளில் என்ன கற்பிக்கப்படுகிறதோ, அது முற்றிலும் தவறான தகவல். ஒரு மதவெறி பிடித்த மன்னன் என்ற திப்புவின் யதார்த்தத்தை அறிந்த பிறகு, நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன். அவரை ஒரு போர்வீரனாக மாற்றுவதற்காக கையாளப்பட்ட ஒரு கொடூரமான யதார்த்தத்தை காட்ட நான் துணிந்து முடிவெடுத்திருக்கிறேன்” என்றார். இதோ திப்பு படத்தின் முன்னோட்ட வீடியோ…