சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், சார்ந்துள்ள துறை மீது பல்வேறு ஊழல் புகார்கள் சொல்லப்பட்டு வந்தன. அந்த வகையில், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் பாட்டிலுக்கு ரூ. 10 வாங்கப்படுகிறது. இதன்மூலம், கோடிகணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என பலர் அமைச்சர் மீது குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் அரசு பங்களாவில் வருமானவரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்திலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. முதல்வர் தற்போது தமிழகத்தில் இருக்கும் போதே வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.