தன் மீது தப்பு இல்லை என்றால் எதுக்குய்யா கத்தணும், கதறணும் என்று செந்தில்பாலாஜியை திரைப்பட இயக்குனர் கௌதமன் விளாசி இருக்கிறார்.
கடந்த மாதம் 26-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி வீடு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள், டாஸ்மாக், மின்சார வாரிய கான்ட்ராக்டர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அவரது தம்பி வீடு உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இச்சோதனையைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவர், தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி கத்திக் கதறினார். உடனே அவரை ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். அங்கு நேரில் வந்து விசாரித்த ஐகோர்ட் முதன்மை நீதிபதி அல்லி, செந்தில்பாலாஜியை 28-ம் தேதி போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவருமான கௌதமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கௌதமன், “செந்தில் பாலாஜி விவகாரத்தைப் பொறுத்தவரை, தப்பு இல்லை என்றால் எதற்காக கத்தணும், கதறணும். தப்பு செய்யும் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. ஒருநாள் இதுபோன்று உருண்டு புரண்டுதான் ஆக வேண்டும். சாராயம் வித்துத்தான் ஆட்சி நடத்த வேண்டுமென்றால், அதுக்கு வேறு தொழில் பண்ணலாம்.
தி.மு.க.வுக்கு நிதிக் களஞ்சியமாக விளங்குவதே செந்தில்பாலாஜிதான் என்று கூறப்படுகிறது. செந்தில்பாலாஜியின் கைது விவகாரத்தை சமூக வலைத்தளங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. ஆகவே, திருடுகிற கூட்டம் இனிமேலாவது திருந்த வேண்டும். யார் தவறு செய்தாலும் ஆட்சியாளர்கள் தூக்கி எறிய வேண்டும். கொள்ளையடிக்கும் கூட்டம் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே, திருந்த வேண்டியது அரசியல்வாதிகள் அல்ல, மக்களாகிய நாம்தான்” என்று விளாசி எடுத்திருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.