ராமநாதபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தனக்கு மரியாதை தரவில்லை என்று சொல்லி, தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி. நவாஸ்கனி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சமாதானம் செய்ய வந்த கலெக்டரை கட்சியினர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரத்தில் நடந்தது. இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், எம்.பி. நவாஸ்கனிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னதாகவே வந்துவிட்டதால், நிகழ்ச்சியை தொடங்கி விட்டார்கள். அப்போது அங்கு வந்த எம்.பி. நவாஸ்கனி, நிகழ்ச்சி தொடங்கப்பட்டதைக் கண்டு ஆத்திரமடைந்தார்.
இதுகுறித்து கலெக்டரிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார். அப்போது, அமைச்சர் ராஜகண்ணப்பன் குறுக்கிட்டு, சமாதானப்படுத்தி இருக்கிறார். அதற்கு, நானும் மக்கள் பிரதிநிதிதான், எனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதால்தான் கலெக்டரிம் கேட்கிறேன். நீங்கள் குறுக்கிடாதீர்கள் என்று கோபமாகக் கூறியிருக்கிறார். அப்போது, சும்மா போயா அங்கிட்டு என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கோபமாகக் கூறவே, என்ன, வாய்யா போய்யான்னு சொல்ற, தொலைச்சுப்புடுவேன் என்று எம்.பி. நவாஸ்கனி கொந்தளிக்க, அங்கு அசாதாரண சூழல் நிலவியது.
இதனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்களுக்கும், எம்.பி. நவாஸ்கனி ஆதரவாளர்க்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதைக் கண்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், எம்.பி. நவாஸ்கனியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவரை கட்சியினர் சிலர் கிழே தள்ளிவிட்டனர். உடனே, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் கலெக்டரை தூக்கிவிட்டனர். பிறகு, தலைமைச் செயலாளரை தொடர்புகொண்டு கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறிவிட்டு, கிளம்பிச் சென்றார் எம்.பி. நவாஸ்கனி.
தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பனும், கூட்டணிக் கட்சியை சேர்ந்த முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி. நவாஸ்கனியும் அரசு நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட இச்சம்பவம் கட்சி நிர்வாகிகள் மட்டுமன்றி பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.