புதுக்கோட்டையில் காலி சேர்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் வீர உரையாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக அரசு வழக்கறிஞர்கள் மூலம் வாதாடி இத்தீர்ப்பை பெற்றுக் கொடுத்ததற்காக, அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்புக் கூட்டம் புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு, ஜல்லிக்கட்டு பேரவையின் நிறுவனத் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அமைச்சர்கள் ரகுபதி, கே.என்.நேரு, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன், மூர்த்தி, சிவசங்கர், அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு ஜல்லிக்கட்டு அமைப்பினர் சார்பில் காளை உருவம் பொறித்த சிலை வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய உதயநிதி, “மோடிக்கும் பயப்பட மாட்டோம். இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம். எத்தனை மோடிகள், எத்தனை அமித்ஷாக்கள், எத்தனை ஜிக்கள் வந்தாலும் தமிழகத்தை ஒன்றும் செய்ய முடியாது” என்று வீரவேசமாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அவரது பேச்சைக் கேட்கத்தான் ஆள் இல்லை என்பதுதான் வேடிக்கை.
முன்புற பகுதியில் மட்டும் சிலர் அமர்ந்திருக்க, பின்னால் இருந்த நாற்காலிகள் அனைத்தும் காலியாகக் கிடந்தன. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் ஆளே இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்துற என்று கிண்டல் செய்து வருகின்றனர்.