இங்கு வெடிகுண்டு வைத்திருக்கிறேன், அங்கு வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று குடிபோதையில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் பீர்முகமதுவை போலீஸார் 7-வது முறையாக கைது செய்திருக்கிறார்கள்.
கோவைப்புதூர் அருகேயுள்ள சுகுணாபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பீர் முகமது. போதை மன்னனான இவர், மதுபோதையில் அடிக்கடி சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஒரு முறை டாஸ்மாக் கடைக்குச் சென்று ஓசியில் மது கேட்டிருக்கிறார். கடையின் விற்பனையாளர் தரமறுக்கவே, அக்கடையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து விட்டார்.
இதுகுறித்த தகவல் கோவை போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டு, போலீஸார் வந்து மேற்படி டாஸ்மாக் கடையை சல்லடை போட்டுத் தேடியதில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகுதான், அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது யார் என்பதை, அவரது செல்போன் எண்ணை வைத்து கண்டுபிடித்து, பீர்முகமதுவை கைது செய்தனர். இதேபோல, போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இதுவரை 6 முறை கைது செய்யப்பட்டிருக்கிறார் பீர்முகமது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட பீர்முகமது, ஒரு குழந்தையின் உடலில் வெடிகுண்டை பொருத்தி இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் பதட்டமடைந்த காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார், அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் கோவையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோவை மாநகர போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பீர் முகமதுதான் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைது செய்தனர். பீர்முகமது தற்போது கைது செய்யப்படுவது 7-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.