‘தேவர் மகன்’ பட சர்ச்சை… அரசியல் ஆதாயத்துக்காக கமல்ஹாசன் சைலன்ட்… இயக்குனர் பேரரசு விளாசல்!

‘தேவர் மகன்’ பட சர்ச்சை… அரசியல் ஆதாயத்துக்காக கமல்ஹாசன் சைலன்ட்… இயக்குனர் பேரரசு விளாசல்!

Share it if you like it

‘தேவர் மகன்’ திரைப்பட சர்ச்சை விவகாரத்தில், அரசியல் ஆதாயத்திற்காக நடிகர் கமல்ஹாசன் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார் என்று இயக்குநர் பேரரசு கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து தெரிவித்த கருத்துகள் மிகப்பெரிய சர்ச்சையானது. கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் மாரி செல்வராஜின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர். குறிப்பாக, தேவர் சமூகத்தினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இன்னும் சிலரோ, தேவர் மகன் திரைப்படம் வெளியானபோது மாரி செல்வராஜுக்கு வெறும் 9 வயதுதான். அப்போதே, அப்படம் அவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறியிருப்பது நகைப்புக்குரியது என்றெல்லாம் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், இதற்கு கமல் மட்டும் வாய் திறக்கவே இல்லை.

இந்த நிலையில்தான், தேவர் மகன் திரைப்பட விவகாரத்தில் அரசியல் ஆதாயத்திற்காகவும், சினிமா வியாபாரத்திற்காகவும் நடிகர் கமல்ஹாசன் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார் என்று இயக்குநர் பேரரசு விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து பேரரசு கூறுகையில், ‘‘மாமன்னன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்த கமல்ஹாசனை, இயக்குநர் மாரி செல்வராஜ் வசை பாடிவிட்டதாக இங்கு நிறைய கோப வீச்சுகள் பரவி வருகின்றன. ஆனால், இதில் கமல்ஹாசனுக்கு எந்தவித வருத்தமும் இல்லை, கோபமும் இல்லை. அவருடைய உரையில் அதற்கான பதில் எதுவும் இல்லை. மேலும், மாரி செல்வாராஜை உயர்த்திப் பிடித்தே பேசினார். அது அவருடைய பக்குவமாக இருக்கலாம்.

மேலும், கமல்ஹாசன் என்ற நடிகரை அந்த இயக்குனர் குறை சொல்லவில்லை. ‘தேவர் மகன்’ என்ற படைப்பை குறை கூறி இருந்தார். தான் நடித்த ஒரு படைப்பை, குறிப்பாக தமிழகமே கொண்டாடிய ஒரு படைப்பை, ஒருவர் குறை சொல்லும்போது, அதற்கு பதிலளிக்க வேண்டியது கடமை. கமல்ஹாசனை குறை கூறும்போது, அதற்கு அவர் எந்தவித எதிர்வினையும் காட்டாதிருப்பது அவரது இஷ்டம். ஆனால், தான் நடித்த சிறப்பான படைப்பை ஒருவர் பொது மேடையில் குறை கூறும்போது, அதற்கான விளக்கத்தை அளித்திருக்க வேண்டியது ஒரு நல்ல கலைஞனின் கடமை. அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஒரு கலைஞனாக அல்ல, ஒரு அரசியல்வாதியாக இருந்து விட்டார். அரசியல் ஆதாயத்திற்காகவும், சினிமா வியாபாரத்திற்காகவும் தனது வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார்.

நாட்டு மக்களில் பலர் ஒரு நல்ல படைப்புக்காக பொங்கிஎழும்போது, அந்தப் படைப்பால் ஆதாயம் பெற்ற ஒருவர் அமைதியாக இருந்தது வியப்பாக இருக்கிறது. மேலும், தேவர்மகனை குறை கூறும்போது அவருக்கு கோபம் வரவாய்ப்பு இல்லை. ஏனென்றால், அவருக்கு அது ஒரு சினிமா. ஆனால், ரசிகர்களுக்கு அது ஒரு சிறந்த படைப்பு. அது ஒரு சமூகத்தின் பதிவு. எனவே மக்களே! கமலுக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதே என்று யாரும் கவலைப்படாதீர்கள். ஒரு படைப்பு, புரிதல் இல்லாதவரின் விமர்சனத்திற்கு உள்ளாகி விட்டதே என்று மட்டும் கவலைப்படுவோம்! அதை புறம் தள்ளுவோம்” என்று கமலை விளாசி இருக்கிறார்.


Share it if you like it