ஏர்வாடி தர்காவில் நடுத்தர வயதுப் பெண் ஒருவர் பிளேடால் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இஸ்லாமியர்களின் தர்கா அமைந்திருக்கிறது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இங்கு சிகிச்சை பெறுவதற்காக சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் வந்து, தர்கா அருகிலுள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்தார். இவரது பெயர் மற்றும் முகவரி தெரியவில்லை. இந்த சூழலில், நேற்று இப்பெண் பிளேடால் கழுத்து மற்றும் இடது கை மணிக்கட்டிலுள்ள நரம்பு அறுக்கப்பட்ட நிலையில், தர்காவிலுள்ள கழிப்பறையில் உயருக்குப் போராடிய நிலையில் கிடந்தார்.
இதைக்கண்ட தர்கா நிர்வாகிகள், அப்பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அப்பெண் இறந்தார். அதேசமயம், அப்பெண்ணுடன் வந்த அவரது கணவரை காணவில்லை. இதுகுறித்து ஏர்வாடி தர்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான அப்பெண்ணின் கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.