மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், முதல்வர் பைரோன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யச் சென்றார். ஆனால், அவரை செல்லவிடாமல் வழியிலேயே தடுத்து நிறுத்திய பெண்கள், அவருடைய ராஜினாமா கடிதத்தை கிழித்தெறிந்தனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெயிட்டி வகுப்பினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடியினரான குக்கி இனத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே கடந்த 2 மாதங்களாக மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்திருக்கிறது. இந்த வன்முறைக்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது.
இதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் அறிவித்தார். மேலும், மத்திய அரசும் பைரோன் சிங்கிடம் ராஜினாமா செய்யும்படி அழுத்தம் தருவதாகவும் கூறப்பட்டது. எனவே, தனது பதவியை ராஜினாமா செய்வதற்காக முதல்வர் பைரோன் சிங் இன்று மதியம் ராஜ்பவன் நோக்கி புறப்பட்டார். இதையறிந்த ஏராளமான பெண்கள், தலைமைச் செயலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகை செல்லும் வழியில் உள்ள நூபு லால் காம்ப்ளெக்ஸ் பகுதியில் திரண்டனர்.
இவர்கள் ராஜ்பவனுக்குச் செல்விடாமல் முதல்வரின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். மேலும், முதல்வர் ராஜினாமா செய்யக் கூடாது என்று வலியுறுத்தியவர்கள், அவரது ராஜினாமா கடிதத்தையும் கிழித்தெறிந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கும் முதல்வர் பைரோன் சிங், “நெருக்கடியான இச்சூழலில் நான் பதவிவிலகப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.