அமைச்சர் செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில், 2 நிதிபதிகளும் இரு வேறு விதமான தீர்ப்பு வழங்கி இருப்பதால் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, செந்தில்பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்திருப்பதாகக் கூறி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை 3-வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனிடையே, செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் விரைவாக 3-வது நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, செந்தில்பாலாஜி வழக்கில் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமனம் செய்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா உத்தரவிட்டிருக்கிறார். நீதித்துறையில் தனது குடும்பத்தில் 6-வது தலைமுறையாக சி.வி. கார்த்திகேயன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1964-ம் ஆண்டு சிம்மராஜா – சரஸ்வதி தம்பதிக்கு மகனாக பிறந்த சி.வி.கார்த்திகேயன், சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பையும், அம்பேத்கர் கல்லூரியில் முதுகலை சட்டப்படிப்பையும் முடித்தவர். 1989-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து, பின் மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டு, ராமநாதபுரத்தில் பயிற்சி நீதிபதியாக 2005-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி இயக்குநர், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கும் சி.வி.கார்த்திகேயன், புதுச்சேரி தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.