இந்தியாவின் வேளாண் அறிவியலாளரும், தாவர மரபியலாளருமான எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமானார். அவருக்கு அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பசுமைப்புரட்சியின் தந்தை எனவும் இவர் அழைக்கப்படுகிறார். 1960களில் இந்தியா பசி பட்டினி பஞ்சத்தால் தத்தளித்தபொழுது இவரின் கூட்டு அறிவியல் முயற்சிகள், விவசாயிகள் மற்றும் பிற அறிவியலாளர்களுடன் வெகுஜன இயக்கத்தை முன்னெடுத்து பொது கொள்கைகளின் ஆதரவுடன் இந்தியாவை காப்பாற்றியவர் எம்.எஸ் சுவாமிநாதன்.
இந்நிலையில் சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எம்.எஸ் சுவாமிநாதனை பற்றி பேசியுள்ளார். அதில், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஈச்சங்கோட்டையில் அமைந்துள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இனி மறைந்த எம்.எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் எனவும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் இளம் வேளாண் அறிவியல் பயிர்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று முன்னிலை பெரும் மாணவ, மாணவிகளுக்கு டாக்டர்.எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷன் மற்றும் ரேமன் மகசேசே ஆகிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.