வீரகட்டபொம்முநாயக்கரின் 224 வது நினைவு தினம்
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மனை கயத்தாறில், புளியமரத்தில் மேஜர் பானர்மேன் துாக்கிலிட்டான். அப்போது அந்த மாவீரனின் வயது 39.
பரங்கியர்களுக்கு (ஆங்கிலேயர்) வரி செலுத்தாததால் பரங்கிய பிரதிநிதி மேஜர் பானர்மேன் 1799ல் பாஞ்சாலங்குறிச்சியை தாக்கினான். முதல் நாள் போரில் கட்டபொம்மன் வெற்றி பெற்றான். இதை அறிந்த பானர்மேன், திருநெல்வேலி, கயத்தாறு, பிரிட்டிஷ் கோட்டைகளிலிருந்து பீரங்கி படைகளைக் கொண்டு வந்து பாஞ்சாலங்குறிச்சியின் மீது வெறித் தாக்குதல் தொடங்கத் திட்டமிட்டான். பீரங்கித் தாக்குதலால் பாஞ்சாலங்குறிச்சி மக்களுக்கு பெரும் உயிர் சேதம் ஏற்படும் என்று வருந்திய கட்டபொம்மன், தன் தம்பி ஊமத்துரை, மந்திரி தானாதிபதி மற்றும் சில வீரர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு தப்பித்து சென்றான்.
தப்பிக்க காரணம் :
பானர்மேனின் ஆட்களிடமும், பிரிட்டிஷ்க்கு அடிபணியும் பாளையக்காரர்களிடமிருந்தும் கட்டபொம்மன் தப்பி, திருச்சியில் ஆங்கிலேய ஏகாதிபத்திய அதிகார மையத்தின் கவர்னர் ஜெனரலை சந்திக்க எண்ணினான்.
ஏனென்றால் அப்போது இருந்த மேஜர் ஜெனரல், ஜாக்ஷன்துரைக்கும், கட்டபொம்மனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பை அறிந்தவர். குற்றாலத்திலிருந்து ராமநாதபுரம் வரை படை பரிவாரங்களோடு கட்டபொம்மனை வீணாக அலைக்கழித்து, ஜாக்ஷன்துரை அவமானப்படுத்தியதை அந்த கவர்னர் ஜெனரல் நன்கு அறிவார். ஒரு பாளையக்காரனை அலைய வைத்தது அவருக்கு எரிச்சலை தந்து, ஜாக்ஷன்துரையை பதவி நீக்கம் செய்தார். எனவே இவரிடம் பானர்மேனின் கொடுஞ்செயலை கூறி நீதி கேட்கவே கட்டபொம்மன் தப்பிச்செல்ல வேண்டிய சூழல் உருவானது.
பானர்மேன் கடிதம் :
கட்டபொம்மன் தப்பியதை அறிந்த பானர்மேன், அவரை மிக பெரிய தேசத் துரோகியாக சித்தரித்து எல்லா பாளையக்காரர்களுக்கும், ‘கட்டபொம்மன், உடன் உள்ள ஊமத்துரை, தானாதிபதி மற்றும் அவனிடம் உள்ளவர்களுக்கு அடைக்கலமோ, உதவியோ கொடுக்க கூடாது. மேலும் கட்டபொம்மனை பிடிக்க பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்ய வேண்டும். அதற்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மீறினால் அடைக்கலம் கொடுத்த பாளையக்காரரும், அவர் பாளையமும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகும்,’ என்று எழுதினான்.
தப்பிய கட்டபொம்மனும், மற்றவர்களும், கோல்வார்பட்டியில் உள்ள அரண்மனையில் தங்கியுள்ளனர் என்ற செய்தியை அறிந்த எட்டப்பன், பானர்மேனிடம் தனக்கு சில ஆங்கிலேய சிப்பாய்களின் உதவியை வேண்டினார். பானர்மேனும் எட்டப்பனுடன் சிப்பாய்களை அனுப்பினான். அவர்கள் துணையுடன் கோல்வார்பட்டி கோட் டையை எட்டப்பன் தாக்க, தானாதிபதி மட்டும் பிடிபட மற்றவர்கள் தப்பி சென்றனர். தானாதிபதி கைதை எட்டப்பன் பானர்மேனுக்கு தெரிவிக்க, பானர்மேன் விருப்பப்படி நாகலாபுரம் கடை வீதிக்கு தெற்கில் உள்ள கணேசர் கோவில் அருகில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் துாக்கிலிட்டான்.
தானாதிபதியின் தலையை துண்டித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் மக்கள் பார்வை படும்படி எட்டப்பன் வைத்தான்.
கோல்வார்பட்டியிலிருந்து தப்பிய கட்டபொம்மன் அவரின் சகாக்களும், திருக்களம்பூரில் உள்ள அடர்த்தி யான குமாரபட்டி காட்டில் மறைவாக இருந்துள்ளார்கள். இந்தக்காடு, புதுக்கோட்டை அரசர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்பட்டது. மேலும் முத்து வைரவன் என்ற தொண்டைமானின் தளபதி கண்காணிப்பில் இருந்தது.
அந்த காலத்தில் வெளி ஆட்கள் நடமாட்டம் இருந்தால் எளிதில் தெரிந்து விடும். குமார பட்டி காட்டில் அன்னிய நடமாட்டம் இருப்பதை அறிந்த புதுக்கோட்டை மன்னர், அந்நியர்கள், பானர்மேன் கடிதத்தில் குறிப்பிட்ட கட்டபொம்மு பாளையக்காரராக இருக்கும், அவர்கள் தன் ஆளுகைக்கு உட்பட்ட எல்லைக்குள் இருந்து, பிரிட்டிஷ் படை கைது செய்தால், தன் பாளையம் பிரிட்டிஷ் பீரங்கி தாக்குதலுக்கு ஆளாகுமோ என்று அஞ்சி, பானர்மேனுக்கு உடனே தகவல் கொடுத்தார்.
அதையடுத்து பிரிட்டிஷ் படை உடனே வந்து சுற்றிவளைத்து கட்டபொம்மன், ஊமத்துரை மற்றும் அவர்களுடன் இருந்தவர்களையும் கைது செய்தது.
நிராயுதபாணியாக அவர்கள் மதுரை வழியாக கயத்தாறு கொண்டு செல்லப்பட்டு, பானர்மேனிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலியான விசாரணை மூலம் கட்டபொம்மன் பானர்மேனால் துாக்கிலிடப்பட்டார். திருக்களம்பூர் குமாரபுரம் காட்டில் கட்டபொம்மனையும், ஊமத்துரையையும் பிரிட்டிஷ்காரர்கள் கைது செய்தனர்.
கட்டபொம்மன் தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதங்கள் என்னவாயிற்று என்று ஆராயும்போது இன்றும், அவர் பயன்படுத்திய ஆயுதங்களான கத்தி, ஈட்டி, களரி, குத்துவாள், கட்டாரி போன்றவற்றை முத்துவைரவன் வாரிசுகள் வீட்டில் வைத்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையன்று அவ்வாயுதங்களை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து பயபக்தியுடன் பூஜை செய்கின்றனர்.
ஊமையன் கோவில் இவ்வூர் மக்கள் திருக்களம்பூர் குமாரப்பட்டி காட்டில் ஊமத்துரைக்கு ஒரு மேற்கூரை இல்லாத கோயில் கட்டி வழிபடுகின்றனர். அடர்த்தியான இக்காட்டிற்குள் ஆடு மேய்ப்பவர்கள் துணையுடன், கள ஆய்வு நடந்த போது இக்காடு சுமார் 30 ஏக்கர் அளவில் உள்ளது. இக்காட்டில் பழ மரங்கள், தண்ணீர் தடாகமும் இருந்துள்ளன என்பது தெரிய வருகிறது. இங்கு உள்ள மக்கள் இக்காட்டிலிருந்து காய்ந்த மரங்களை கூட எக்காரணம் கொண்டும் வெட்ட மாட்டார்களாம். மேலும் குதிரையில் அமர்ந்த நிலையில் ஊமத்துரை போல் பதுமைகள் செய்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.தங்கள் விளை நிலங்களில் விளைந்தவற்றை முதலில் ஊமையன் கோயிலுக்குபடைக்கும் வழக்கத்தை வைத்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியை அடுத்து வரும் வெள்ளியன்று ஊமயனுக்கு விழா எடுக்கின்றனர். அப்போது கட்டாயமாக வீரபாண்டிய கட்டபொம் மன் நாடகத்தையும் நடத்துகின்றனர்.
3.1.1760ல் பிறந்த கட்டபொம்மன், 16.10.1799ல் வீர மரணமடைந்தார். அவர் 39 ஆண்டுகள் வாழ்ந்தாலும் நுாறாண்டுகளுக்கு மேலாக அவரது வீரம் இன்றும் போற்றப்படுகிறது
.#வீரகட்டபொம்முநாயக்கரின் வீரத்தை போற்றும் வகையில் .
வெல்லிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் கட்டபொம்முவின் சிலை நிறுவப்பட்டுள்ளது
திருநெல்வேலி அருகே உள்ள விஜய நாராயணபுரத்தில் 3000 ஏக்கர் விரிந்த இந்திய கப்பல் படையின் தொலை தொடர்பு தளத்திற்கு INS KATTABOMMAN என்று பெயரிடப்பட்டது . இந்த தளம் 1990 ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது .
கட்டபொம்முவின் வீரத்தை போற்றும் இந்நாளில் கட்டபொம்முவின் தளபதிகள் “ஊமைத்துரை, வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம் ” “சிங்கமுத்து சேர்வை” மற்றும் பரங்கியருக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த எண்ணற்ற வீரர்களின் வீரத்தையும் நினைவு கூறுவோம் .
- திரு.ரஞ்ஜீத் VC