கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் மூன்று நாள் உலகளாவிய இந்தியா உச்சி மாநாட்டைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி, மாறிவரும் இந்த உலக ஒழுங்கில், முழு உலகமும் புதிய கோணத்தில் இந்தியாவை நோக்கிப் பார்க்கிறது. உலகமே பொருளாதார நெருக்கடியின் பிடியில் இருக்கும் வேளையில் இந்தியப் பொருளாதாரம் மேலும் வலுப்பெற்று வருகிறது. உலகின் முதல் மூன்று பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நாட்டின் கடல்சார் துறையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் மோடி, “இந்தியாவின் கடல்சார் திறன் எப்போதெல்லாம் வலுவாக இருந்ததோ, அப்போதெல்லாம் நாடும் உலகமும் அதன் மூலம் பெரிதும் பயனடைந்துள்ளன என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. இதை எங்களின் வழிகாட்டும் கொள்கையாகக் கொண்டு, இந்தத் துறையை வலுப்படுத்த கடந்த 9 ஆண்டுகளாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்” என்றார். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் நடைமுறைக்கு வந்தால் கடல்சார் தொழில் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி கூறினார்.
மேலும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை அமைப்பதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்முயற்சியில் இது ஒரு பெரிய படியாகும், இது 21 ஆம் நூற்றாண்டில் உலகெங்கிலும் உள்ள கடல்சார் தொழிலுக்கு புத்துயிர் அளிக்கக்கூடியது, ”என்று பிரதமர் மோடி கூறினார்.