சென்னை பெரும்பாக்கம் அரசு மேல்நிலைபள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சந்தேகங்களை கேட்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பள்ளியில் இருக்கும் ஒருசில ஆசிரியர்கள் கூட சரியாக பாடங்களை நடத்தாமல் மாணவர்களையே சுயமாக படிக்க சொல்வதாக கூறப்படுகிறது. இதனால் தான் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் மாணவி துளசி பிரியா, உயிரியல் ஆசிரியர் இல்லாமல் பனிரெண்டாம் வகுப்புவரை வந்துள்ளார். ஆசிரியர்கள் இல்லாத காரணத்தாலும் தேர்வுகள் நெருங்கி வருவதை ஒட்டியும் மாணவ மாணவிகள் சுயமாகவே அவர்கள் யூடியூப் மற்றும் மாநில பள்ளி கல்வி துறையால் உருவாக்கப்பட்ட செயலியான மணற்கேணியை பார்த்தும் தேர்வுக்கு தயார் ஆகி வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியை எழிலி, இப்பகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் நிலையம் இதுதான். ஆசிரியர்களுக்கு உதவுமாறு பள்ளி கல்வி துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். ஆசிரியர் பற்றாக்குறையினால் இரண்டு வகுப்புகள் இணைத்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி கழிப்பறைகளில் தண்ணீர் இல்லை, தாழ்பாள்கள் உடைந்துள்ளன. வகுப்பறைகளின் மேற்கூரைகள் கசிந்துள்ளன. இதனால் பல மாணவிகள் கழிவறையை பயன்படுத்தாமல் சிறுநீர் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று மாணவிகளின் பெற்றோர் கூறினர்.
இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், கடந்த வாரம் புகார் பட்டியல் பெறப்பட்டது. பள்ளி ஆசிரிர்களிடம் பேசினோம். பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்வோம் என்று கூறினார்.