வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் இலங்கை அருகே நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாநகரின் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
நேற்று காலை முதலே தென் சென்னை மற்றும் அதையொட்டிய புறநகர்ப் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் புழல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. மாநகரப் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு மேல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இரவு 8 மணிக்கு மேலும் மழை நீடித்தது.
இதனால் மாநகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மாலை நேரத்தில் கொட்டிய மழையால், பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சோழிங்கநல்லூர்-தாம்பரம் சாலை, துரைப்பாக்கம் சாலை, தாம்பரம்-மதுரவாயல் சாலை போன்றவற்றில் மழைநீர் தேங்கியதால் ஏற்பட்ட நெரிசலால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

தியாகராய நகர், அசோக் நகர், தேனாம்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கே.கே. நகர் பர்னபி சாலை, அயனாவரம், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
சேத்துப்பட்டு கெங்குரெட்டி சுரங்கப் பாலம் மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், துரைசாமி பாலம், அரங்கநாதன் பகுதிகளில் உள்ள சுரங்கப் பாலங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப் பாலம் மூடப்பட்டது. நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ., கத்திவாக்கம், மதுரவாயல், புழலில் 10 செ.மீ., கொளத்தூர், அம்பத்தூரில் 14 செ.மீ., அண்ணா நகர், திரு.வி.க. நகரில் 12 செ.மீ., கோடம்பாக்கத்தில் 11 செ.மீ. மழை பதிவானது.