வேதாரண்யம் தொகுதி மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதி ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :-
வேதாரண்யம் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, காஸ்டிக் சோடா தொழிற்சாலை, குளிர்பதனக் கிடங்கு, நறுமணத் தொழிற்சாலை, காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை, அரசு பாலிடெக்னிக் கல்லூரி என ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 511 வாக்குறுதிகளில் வெறும் 20 வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றியிருப்பார். பொய் சொல்வதில், ஊழல் செய்வதில், குடிகார மாநிலமாக மாற்றுவதில், குடும்ப ஆட்சியில், சமூகநீதியை உடைப்பதில் மட்டும்தான் நம்பர் ஒன் முதல்வராக இருக்கிறார்.
வேதாரண்யம் மகாராஜபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பள்ளி ஆசிரியர் சங்கமே போராட்டம் நடத்தும் அளவுக்கு சாராய விற்பனை நடக்கிறது. தீபாவளி இரண்டு நாட்களில் வந்த 467 கோடி விற்பனை, அரசுக்கான வருமானம் என்பதற்காக அல்ல. திமுகவினர் நடத்தும் சாராய ஆலைக்கு பணம் வர வேண்டும் என்பதற்காக மட்டுமே டாஸ்மாக் கடைகளை நடத்துகிறார்கள்.
தமிழகத்தில் சாமானியர் ஆட்சி வேண்டுமா அல்லது சாராய ஆலை நடத்துபவர்களின் ஆட்சி வேண்டுமா என்று மக்கள் முடிவு செய்ய வேண்டும். எளிய குடும்பப் பின்னணியில், இருந்து வந்த சாமானியரான பாரதப் பிரதமர் மோடி அவர்களால்தான் சாமானிய மக்களின் கஷ்டத்தை உணர முடியும். மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களும் பெண்கள் முன்னேற்றத்தை முன்னிறுத்தியே செயல்படுத்தப்படுகின்றன. இந்த நலத்திட்டங்கள் தொடர வேண்டும். தமிழகத்திலும் அரசியல் மாற்றம் வேண்டும். வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுகவைப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்துவோம். இவ்வாறு சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவினை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.