வேற்றுமையில் ஒற்றுமை நமது தேசத்தின் பெருமை”- இதை நாம் அறிவோம். குவாஹாட்டியில் நவம்பர் 29- டிசம்பர்1 வரை பயிற்சி வகுப்பு நடந்தது. பின் ஹாஃப்லாங்க் என்ற ஊரில் சிறப்பாக நடந்து வரும் மலைவாழ் மக்கள் மாணவர் விடுதி/ பள்ளிக்குச் சென்றோம். பின் குவாஹாட்டி திரும்ப வந்து நேற்று காமாக்யா தேவி ஆலயத்தில் தரிசனம் செய்தோம். கடல் போல் பரந்து விரிந்து ஓடும் பிரம்மபுத்ர நதியில் படகில் பயணம். ஆற்றின் நடுவே அமைந்துள்ள சிறிய தீவான உமாநந்தத்தில் அருள்பாலிக்கும் சிவ பெருமானை தரிசித்தோம். பல மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்தன.
1) உடை, மொழி, உணவு பலவாக இருந்தாலும் உணர்வும் பண்பும் மலைவாழ் மக்கள் முதல் பெருநகர வாசிகள் வரை ஒன்று தான் என்பதை உணர முடிந்தது. விருந்தோம்பல், புன்னகையுடன் சேவை, எதிர்பார்ப்பில்லாத நாட்டுப்பற்று போன்ற பண்புகள் இயற்கையாகவே சாதாரண மக்கள் மனங்களில் பொதிந்துள்ளன. சங்க அமைப்புகள் இக்குணங்களைப் பெருக்கும் முயற்சியில் வெற்றி பெற்று வருகின்றன. அஸ்ஸாம் மக்களிடம் இவற்றை சிறப்பாகக் காண முடிந்தது. சங்கரதேவ் போன்ற மகான்களின் பணியின் தாக்கம் இன்றும் நாளையும் மக்கள் மனதில் இருக்கும். சங்கரதாஸ் பெயரில் நம் வித்யாலயங்கள் நடைபெற்று வருகின்றன.
2) அடர்ந்த காடுகள், பசுமையான மலைகள் சூழ்ந்த கபடமில்லாத மலைவாழ் மக்கள் வசிக்கும் திமுக ஹசி மாவட்டத்திலுள்ள ஹாஃப்லாங்க் விடுதியும் வித்யாலயமும் கடந்த 40 ஆண்டுகளாக பல தடைகளைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
3) முதன் முதலில் கோரக்பூரில் சிசுமந்திர் துவங்கிய உயர்திரு கிருஷ்ணசந்திர காந்திற அவர்கள் தான் ஹாஃப்லாங்கிலும் 1982 இல் இத்திட்டம் துவங்கக் காரணமாக இருந்தார். அவரைப் போன்ற பலரது கடின உழைப்பால் இன்று அங்கு மலைவாழ் மாணவ மாணவிகளுக்கு தனித் தனி விடுதியும் வித்யாலயமும் நடக்கின்றன. திமாசா, சக்மா என சுமார் 8 வகையான மலைவாழ் மக்கள் இதில் பயனடைகின்றனர். உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு அளப்பரியது. கிறித்தவ மதமாற்ற சக்திகளுக்கு இரையாகாமல் 100% ஹிந்துக்களாக திமாசா மக்கள் வாழ்கின்றனர். ராணி கைடினில்யூ என்ற சுதந்திர போராட்ட வீராங்கனையின் நினைவு இன்றும் அங்கு போற்றப்பட்டு வருகிறது. மலைவாழ் குழந்தைகளுக்கு நல்ல கல்வியும் பண்பாடும் ஹிந்து உணர்வும் அளிக்க இப்பணி சிறப்பாக நடந்து வருகிறது. மலைவாழ் மக்கள் விடுதிக்கான அகில பாரத அளவில் இது தான் முதலானதாகும். இதைப் போல இன்னும் 7 விடுதிகளும் வித்யாலயங்களும் அம்மாவட்டத்தில் நடைபெறுகின்றன.
4) மக்களின் விருந்தோம்பல் வியப்பாக உள்ளது. நாங்கள் காரில் சென்று இறங்கியதும் மாணவர்கள் எங்களது பைகளைச் சுமந்து சென்றனர். இனிய முகத்துடன் சேவை புரிந்தனர். உணவு பரிமாறும் பொழுது அன்பு கலந்து செய்தனர். நல்ல குளிரிலும் இரு சிறுவர்கள் அறையின் வாசலில் இருந்து ஏதேனும் தேவையா என குறிப்பறிந்து செய்தனர்.
5) மாலை கலாசார நிகழ்ச்சி. பலவிதமான உள்ளூர் நடனம், வாத்திய இசை, கவிதை என பல வயது சிறுவர் சிறுமிகளின் பங்களிப்பில் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
6) உள்ளூர் பொருட்களைக் கொண்டே சுயத் திறமையினால் மூங்கிலால் தயாரிக்கப்பட்ட குவளைகள், குடிநீர் வைக்க பெரிய சொம்புகள் எனப் பலவும் வியக்க வைத்தன.
7) கலை நிகழ்ச்சிகள் நம் மரபையும் நாட்டுப் பற்றையும் உறுதி செய்தன. கூட்டாகவும் தனியாகவும் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
8) கடல் போல பரந்து விரிந்த பிரம்மபுத்ர நதியில் தான் பெரிய படகுகளை செலுத்த முடியும். 30- 70 அடி ஆழம் வரை வேகமாகப் பாயும் இந்நதியில் யாரும் குளிப்பதில்லை. ஆனால் அஸ்ஸாம் மக்களின் வாழ்க்கை இந்நதியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பூபேந்திரகுமார் ஹசாரிகா போன்ற பல அஸ்ஸாம் கவிகள் பிரம்மபுத்திரா ஆறு பற்றி பல கவிதைகளை எழுதியுள்ளனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சியில் இதைக் கூட்டாகப் பாடினர்.
9)குவாஹாட்டியில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள மாஜுலி, நதியின் நடுவே அமைந்துள்ள மிகப் பெரிய தீவாகும்.
10) அஸ்ஸாமில் மற்றொரு சிறப்பு. நம் அமைப்புகள் இணைந்து செயல்படுவது வார்த்தையில் மட்டுமில்லாமல் செயலிலும் உள்ளது. விசுவ ஹிந்து பரிஷத் மூலம் துவக்கப்பட்ட வித்யாலயம் மற்ற அமைப்புகளின் பல பணிகளுக்கும் ஆதாரமாக உள்ளது. சேவா பாரதி நடத்தும் விடுதியில் உள்ள மாணவர்கள் வித்யா பாரதி வித்யாலயத்தில் படிக்கின்றனர். இரண்டும் அருகருகே உள்ளன. பல அமைப்புகளின் பயிற்சி வகுப்புகள் சேவா பாரதி மையத்தில் நடக்கின்றன.
தேச ஒருங்கிணைப்பு, ஹிந்து சமுதாய, பண்பாட்டு, தர்மத்தைக் காக்கும் பணியில் அங்குள்ள செயல் வீரர்கள் உறுதியாக முன்னேறி வருகின்றனர்.
11) உயர்திரு கிருஷ்ணகுமார் ஜி அவர்கள் பிரசாரக் வர்கவில் பல விஷயங்களைக் கூறினார். அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களின் வரலாறு, பாரம்பரியம், மக்களின் வாழ்க்கை முறைகள் என பல அவற்றில் அமைந்திருந்தன. ராமாயண, மகாபாரத காலந்தொட்டு இப்பகுதிகள் நம் நாட்டுடன் இணைந்துள்ளன என்ற குறிப்புகளை இதிகாசங்களில் காணலாம் என்றார். மேலும் நம் வித்யாலயங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என, ஆங்கில மொழி பேச்சுத் திறன், மாணவர்களின் தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எண்ணிக்கை வளர்ச்சி, எல்லைப்புற பகுதிகளில் நம் வித்யாலயங்களின் வேலை, முன்னாள் மாணவர் பங்களிப்பு எனப் பலவற்றைக் குறிப்பிட்டார். உபநிடதங்களில் மாணவர் ஆசிரியர் உறவு, சிறந்த மாணவர்களை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் போன்ற கருத்துகள் தைத்திரிய உபநிடதத்தில் உள்ளதை மேற்கோள் காட்டினார்.
க்ஷேத்ர அமைப்பாளர் திரு பவன்ஜி திவாரி தலைமையில் அங்குள்ள கார்யகர்த்தர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தது அனைவரது மனங்களையும் குளிர்வித்தது.
மிகவும் பயனுள்ள மறக்க முடியாத பயணம்.