அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் அனுப்பி வைப்பு !

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் அனுப்பி வைப்பு !

Share it if you like it

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் மூலம் நாமக்கல்லில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் நாமக்கல்லில் கடந்த ஒரு மாத காலமாக தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மணிகள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை செய்யப்பட்டு பெங்களூருக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்த அனைத்து மணிகளும் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பப்பட உள்ளது. கோயில் கும்பாபிஷேக தினத்தன்று இம்மணிகள் அனைத்தும் அங்கு ஒலிக்க உள்ளன.

இதுகுறித்து மணி தயாரிப்பில் ஈடுபட்ட நாமக்கல் ஸ்ரீ ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் காளிதாஸ் (எ) புருஷோத்தமன் ஆகியோர் கூறியதாவது: “கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர நாயுடு என்பவர் அயோத்தி ராமர் கோயிலுக்கு மணிகளை வழங்க உள்ளார். இதற்கான அனுமதியை அவர் பெற்றுள்ளார். அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எங்களை அணுகி மணி தயார் செய்வதற்கான ஆர்டரை வழங்கினார்.

இதன்படி 70 கிலோ எடையில் 5 ஆலய மணிகள், 60 கிலோ எடையில் 6 ஆலய மணிகள் மற்றும் 25 கிலோ எடையில் ஒரு மணி என மொத்தம் 12 மணிகள், 36 பிடி மணிகள் தயாரிப்பதற்காக ஆர்டர் வழங்கினார். மொத்தம் 25 பேர் கடந்த ஒரு மாத காலம் இரவு பகலாக இப்பணியை மேற்கொண்டு முடித்துள்ளோம். மணி தயாரிப்புக்கு காப்பர், வெள்ளி, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் பயன்டுத்தப்பட்டன. இவற்றை ராஜேந்திர நாயுடு வழங்கினார்.

இம்மணிகள் மொத்தம் 1,200 கிலோ எடை கொண்டது. மணி தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. இதையடுத்து இம்மணிகள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வைத்து பூஜை செய்து பெங்களூருக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட உள்ளது. அங்கு இம்மணிகள் அனைத்தும் வாகனங்களில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் இம்மணிகள் அனைத்தும் அயோத்தி ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். ராமர் கோயிலுக்கு மொத்தம் 108 மணிகள் தேவை. முதல் கட்டமாக 48 மணிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.


Share it if you like it