மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நாட்டின் சட்டம். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் பிற நாடுகளில் துன்புறுத்தப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளுக்கும், மற்ற 6 மத சிறுபான்மையினருக்கும் நீதி வழங்க இது ஒரு கருவியாகும். CAA என்பது நாட்டின் சட்டம், அது கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என உறுதியளிக்க விரும்புகிறேன்.
சிஏஏ குடியுரிமையை பறிக்கும் என்று சிறுபான்மையினர் மற்றும் குறிப்பாக இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் ரத்து செய்யப்படவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல. இது குடியுரிமை வழங்கும் சட்டம். அது நடைமுறைப்படுத்தப்படும். அது எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது சரியான நேரத்தில் செயல்படுத்தப்படும் என அமித்ஷா தெரிவித்தார்.
1950-ல் இருந்தே (பாரதிய ஜன சங்கம்), எங்களின் தேர்தல் அறிக்கைகளில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி UCC கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் எங்கும் பின்வாங்க மாட்டோம் என அவர் அமித்ஷா கூறியுள்ளார்.