சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் சிலை வைக்கும் திமுக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக பாஜக எழுப்பிய கண்டனக் குரலை அடுத்து, சிலை வைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் அமரர் எம்.ஜி.ஆர், கருணாநிதி, திருமதி. ஜானகி அம்மாள், செல்வி. ஜெயலலிதா, ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அமரர் என்.டி.ராமராவ் மற்றும் கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் புகழ்பெறக் காரணமாக இருந்த நிறுவனம். தமிழ், சிங்களம் உட்பட ஏழு மொழிகளில் நூறு திரைப்படங்களுக்கும் அதிகமாக இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனரான அமரர் டி.ஆர்.சுந்தரம் முதலியார் அவர்கள், திரையுலகின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்த் திரையுலகின் முதல் இரட்டை வேடக் கதாபாத்திரம், மலையாள மொழியின் முதல் பேசும் படம், தமிழ் மற்றும் மலையாளத்தின் முதல் வண்ணத் திரைப்படங்கள், தமிழகத்தில் படமாக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம் என திரைப்படங்களில் பல புதுமைகளைக் கொண்டு வந்தவர். மேற்சொன்ன தமிழகத் தலைவர்கள் அனைவராலும் முதலாளி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். பாரம்பரியமிக்க இந்த மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் நினைவாக, சேலம் ஏற்காடு சாலையில், நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்த நினைவு வளைவு முன் நின்று புகைப்படமும் எடுத்தது, வலைத்தளங்களில் பேசப்பட்டது.
மாடர்ன் தியேட்டர் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அமைக்க, முதலமைச்சர் விரும்புவதாகக் கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர், நினைவு வளைவு அமைந்திருக்கும் இடத்தைக் கொடுக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், அமரர் டி.ஆர்.சுந்தரம் முதலியார் அவர்களது குடும்பத்தினர் அதனை ஏற்றுக் கொள்ளாததால், அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு பூட்டு போட்டு பூட்டிவிட்டதாக நில உரிமையாளர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக திமுகவினர் தன்னை மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் புகழ்பெற்ற சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் சிலை வைக்கும் திமுக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக பாஜக எழுப்பிய கண்டனக் குரலை அடுத்து, சிலை வைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.
தலைநகர் சென்னை, இன்னும் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து முப்பது மாதங்கள் கடந்தும், தமிழகம் முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்படவில்லை.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், பிறருக்கு உரிமையான இடத்தில் தங்கள் தலைவர்கள் சிலை வைப்பது போன்ற வீண் வேலைகளில், இனியும் திமுக ஈடுபடாது என்று நம்புகிறோம். மக்கள் நலன் சார்ந்த பணிகளில் மட்டும் ஈடுபட வலியுறுத்துகிறோம். இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.