கடந்த 1990-ல் நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, வாஜ்பாயுடன் 15 நாட்கள் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டேன். தற்போது, அடல்ஜியை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.
மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் அடல் ஆரோக்கிய கண்காட்சி தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் வருகை தந்தார். அவரை மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக், முன்னாள் துணை முதல்வர் தினேஷ் ஷர்மா, நாடாளுமன்ற உறுப்பினர் சுதன்ஷு திரிவேதி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நீரஜ் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “இந்தியாவின் பொருளாதாரம் கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. இன்று நாம் பொருளாதாரத்தில் உலகின் 5-வது பெரிய வல்லரசாக இருக்கிறோம்.
அடுத்த 4, 5 ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 3-வது பெரிய வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கும். ஆனால், அதை அடைய நாட்டின் குடிமக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
எவ்வளவுதான் திறமை இருந்தும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் எதுவும் செய்ய முடியாது. நமது வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது கொள்கைகளில் உறுதியாக இருந்தார். முக்கியமான பிரச்சனைகளை கவனமாகக் கையாண்டார். தற்போது வாஜ்பாய் இருந்திருந்தால், இந்தியா இன்று அடைந்திருக்கும் நிலையைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார்.
1990 முதல் 1991 வரை பிரதமராக இருந்த சந்திரசேகர் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக பதவி வகித்தேன். அப்போது, எங்களது அரசுக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இருந்தது.
மேலும், ஒரு அமைச்சராக ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்போது, ஐரோப்பாவில் வாஜ்பாயுடன் 15 நாட்கள் பயணம் செய்தேன். தற்போது, அடல்ஜியை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். கண்டிப்பாக அவரை மிஸ் செய்கிறேன்” என்றார்.