சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்பட்டுவரும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த சில மாதங்களாகவே சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் செந்தில் பாலாஜியின் நண்பர் மணியின் உணவகத்தில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 2 ஆவது நாளாக நேற்றும் அங்கு ஆய்வானது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் புதிதாக கரூர் நாமக்கல் புறவழிச்சாலையில் வீடுகட்டி வருகிறார். அந்த வீட்டில் வருமானவரித்துறை மதிப்பீட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அசோக் கட்டிவரும் புதிய வீட்டின் மதிப்பு, பரப்பளவு, கட்டுமான செலவுகள் போன்றவற்றை நில அளவையர்களையும் உடன் அழைத்து வந்து மதிப்பிட்டு வருகின்றனர்.
முன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக மீது புகார் அளிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.
அதற்கிடையே செந்தில் பாலாஜியின் நண்பர் மணி மற்றும் சகோதரர் அசோக்குமார் வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவது நாளைய தீர்ப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.