சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநில முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் ஸ்ரீராமர் கோவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இக்கோவிலை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு உறுதி எடுத்திருக்கிறது.
ஆகவே, நாடு முழுவதும் இருந்து அயோத்தி கோவிலுக்கு பத்கர்களை இலவசமாக அழைத்துச் செல்ல பா.ஜ.க. முடிவெடுத்திருக்கிறது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு ஆண்டுதோறும் 20,000 பக்தர்கள் இரயிலில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்தது.
இதனைதொடர்ந்து, முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு தரிசனத்துக்குச் செல்ல ஆண்டுதோறும் 20,000 பக்தர்களுக்கு இரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
அவர்களுக்கான கட்டணச் செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். 18 முதல் 75 வயது வரையுள்ள நல்ல உடல் ஆரோக்கியமுள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். முதல்கட்டமாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைக்கப்படும். அயோத்திக்கு செல்பவர்களை அக்குழுவினர் தேர்வு செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாநில சுற்றுலா வாரியம் மேற்கொள்ளும். இதற்கான நிதி சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்படும்.
மேலும், அயோத்திக்கு வாரம்தோறும் சிறப்பு இரயிலை இயக்க இரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. வாரணாசி வழியாக அயோத்திக்கு இரயில் இயக்கப்படும். பக்தர்கள் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசிப்பதுடன் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.