பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடந்தேறியது. ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்துள்ளனர். அதோடு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தி ராமனை தரிசிக்க வந்துள்ளனர்.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில், பக்தர்களுடன் அமர்ந்து, பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளித்தார். இதுதொடர்பாக அண்ணாமலை அவர்கள் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :-
கோடிக்கணக்கான பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.
புண்ணிய பூமியான அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
புனிதமான இந்த வைபவத்தை, சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில், பக்தர்களுடன் அமர்ந்து, பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளித்தோம்.
மாநிலச் செயலாளர்கள் திரு.வினோஜ், திருமதி.சுமதி வெங்கட் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு.கே.வி ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.