கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நேற்று நடந்த மாநாட்டில், அம்மாநில முதல்வர் சித்தராமையா பேசுகையில், “பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜனாதிபதி திரௌபதி முர்முவை, புதிய பார்லிமென்ட் மற்றும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை” என பேசியிருக்கிறார். அதில் அவர் ஜனாதிபதியை அவள் இவள் என ஒருமையில் பேசியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்முவை, முதல்வர் சித்தராமையா ஒருமையில் பேசியுள்ளார். இந்த ஜனநாயகவாதியின் உண்மை முகம் தெரிந்துவிட்டது. சித்தராமையா முதல்வர் பதவியில் இருக்க தகுதியற்றவர். அவரை உடனடியாக பதவியில் இருந்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நீக்க வேண்டும். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த, நாட்டின் முதல் ஜனாதிபதியை, தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அவமதித்துள்ளார். வக்கீல், அரசியல் சாசன நிபுணர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் சித்தராமையா, ஜனாதிபதியை ஒருமையில் பேசியதற்கு வெட்கப்பட வேண்டும். அவரது பேச்சு நாட்டையும், அரசியலமைப்பையும் அவமதிக்கும் செயலாகும்.
முதல்வர் மகன் யதீந்திராவை பார்த்து ஒருமையில் பேசியவரை போலீசார் அடித்து இழுத்துச் சென்று, கைது செய்தனர். அப்படியென்றால் ஜனாதிபதியை ஒருமையில் பேசிய சித்தராமையாவுக்கு என்ன தண்டனை? பெண்கள் மீது மரியாதை இருந்தால், சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யட்டும்” என்று கடுமையாக சாடியுள்ளார்.
நம் இந்திய நாட்டினுடைய குடியரசு தலைவரான திரௌபதி முர்முவை மரியாதையின்றி அவருடைய சாதி பெயரை சொல்லி அவமானப்படுத்திய கர்நாடகா முதல்வர் சித்தராமையா அவர்களை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
https://x.com/hd_kumaraswamy/status/1751581582593609734?s=20