ஜார்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். அம்மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய 7 சம்மன்களையும் ஹேமந்த் சோரன் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்ள பயந்து தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்ள தவிர்த்து, அச்சப்பட்டு ஜார்கண்ட் முதலமைச்சர் சோரன் தலைமறைவு என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நில மோசடி, சட்ட விரோத பணபரிவர்த்தனை ஆகிய குற்றச்சாட்டுகளில் மேற்கண்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒரு முதலமைச்சர் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாத சூழ்நிலை, ஊழல் அரசியல்வாதிகளின் கொடூர முகத்தை தோலுரித்து காட்டுகிறது. ஊழல், மோசடி , முறைகேடு என சட்ட விரோத செயல்களை செய்ததோடு அல்லாமல் ஒரு முதலமைச்சர் ஓடி ஒளிவது என்பது வெட்கக்கேடான செயல். ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு. நாட்டுக்கே பெரும் களங்கம். யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.