உ.பி.,யின் ஹாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யேந்திர சிவல். இவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மல்டி டாஸ்கிங் பிரிவு அதிகாரியாக இருந்து வருகிறார். இவர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்காக உளவு பார்த்ததாக உ.பி., பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சத்யேந்திர சிவலை கைது செய்து விசாரணை நடத்தினர். முதலில் உளவு அமைப்புடன் உள்ள தொடர்பை மறுத்துள்ளார். பிறகு, ஆதாரங்களை வைத்து போலீசார் துருவித்துருவி விசாரணை செய்ததில், சத்யேந்திர சிவல் உண்மையை ஒப்புக் கொண்டார்.
தூதரகத்தில் பணியாற்றிய காலத்தில், இந்தியா குறித்த ரகசிய தகவலை பாகிஸ்தானுக்கு கொடுத்ததும், இந்திய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து, பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின் நிலைகள், அதன் செயல்பாடுகள் குறித்த தகவல்களை பெற்றும், இந்திய தூதரகம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.