ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோ கடந்த ஞாயிற்றுக்கிழமை, விண்வெளியில் அதிக நேரம் தங்கி உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே 878 நாட்கள் மற்றும் 12 மணிநேரங்களுக்கு மேல் மொத்தமாக சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கியுள்ளார்.
59 வயதான இவர், 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு ஐந்து விண்வெளி பயணங்களில் மொத்தம் 878 நாட்கள், 11 மணி நேரம், 29 நிமிடங்கள் மற்றும் 48 வினாடிகள் விண்வெளியில் இருந்த தனது சகநாட்டவரான ஜெனடி படல்காவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த சாதனையை விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோ சர்வதேச விண்வெளி நிலையத்தில் கொண்டாடினார்.
இதுகுறித்து பேசிய அவர், ” நான் விரும்பியதைச் செய்யவே விண்வெளிக்குச் செல்கிறேன். சாதனைகளைப் படைக்க அல்ல. நான் சிறுவயதிலிருந்தே விண்வெளி வீரன் ஆக வேண்டும் என்று கனவு கண்டேன், ஆசைப்பட்டேன். அந்த ஆர்வம் – விண்வெளியில் பறக்க, சுற்றுப்பாதையில் வாழ மற்றும் வேலை செய்ய வாய்ப்பு வழங்கியது” என்று கூறினார்.
மேலும் அவர், “எனது அனைத்து சாதனைகளிலும் நான் பெருமைப்படுகிறேன். அதிலும் விண்வெளியில் மனிதர்கள் தங்கியிருக்கும் மொத்த காலத்திற்கான சாதனை ரஷ்ய விண்வெளி வீரரால் இன்னும் உள்ளது என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.