பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் அவர் மீது தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில், மரண தண்டனை வரை விதிக்கக் கூடிய வழக்கில் ஒன்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலில் கால் பதித்தவர் இம்ரான் கான். பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி அதிக இடங்களை வென்றது. இதையடுத்து இம்ரான் கான் கூட்டணி ஆட்சியை அமைத்தார். பாகிஸ்தான் பிரதமராக நான்கு ஆண்டுகளாக இம்ரான் கான் பதவி வகித்த நிலையில், அவருக்கு அளித்து வந்த ஆதரவை கட்சிகள் வாபஸ் பெற்றது.
இதையடுத்து 2022 ஆம் ஆண்டில் இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழந்தார். அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதையடுத்து இம்ரான் கான் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நீதிமன்றங்களில் அவர் மீதான வழக்குகளின் விசாரணை தீவிரமானது. பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த பொருட்களை அவர் கருவூலத்தில் வழங்காமல் முறைகேடு செய்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தலா 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராணுவ தளத்தை அடித்து நொறுக்கினர்: அதன் பிறகு சைபர் கேபிள் முறைகேடு வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தான் சட்டவிரோத திருமண வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது 3 வது மனைவி புஷ்ரா பீபி (வயது 49) ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இம்ரான்கானுக்கு எதிராக கிட்டத்தட்ட 150 வழக்குகள் உள்ளன.
இதில் மிகவும் தீவிரமான வழக்கு என்னவென்றால் கடந்த ஆண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குதான். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை கூட விதிக்கப்ப்ட வாய்ப்புள்ளது. இம்ரான் கான் கருவூல ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு அவரது ஆதரவாளர்கள் அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர் பாகிஸ்தான் ராணுவ தளத்தையும் அடித்து நொறுக்கினர்.
மே 9 ஆம் தேதி நடைபெற்ற வன்முறை வழக்கில் இம்ரான் கான் உள்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்ரான் கான் மீது சட்டப்பிரிவு 59 -ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவு என்ன சொல்கிறது என்றால் பாகிஸ்தான் ராணுவம் அல்லது ராணுவதளத்திற்கு எதிராக ஆயுதேமந்தி தாக்குதல் நடத்தினால் மரண்ட தண்டனை விதிக்கலாம் என்கிறது.
இந்த வழக்கு விசாரணை தற்போது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்றது. எனினும் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வாக்களிக்க கூட இம்ரான் கானுக்கு தகுதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.