எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றன. அதேவேளையில், அரசியல் கட்சியினர் கட்சி மாறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உட்பட 16 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரும், தி.மு.க முன்னாள் எம்.பி ஒருவரும் என மொத்தம் 16 பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.