தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. வரும் 19ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.பொதுவாக ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்நிலையில், தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாலும், அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதாகவும் கூறி சுமார் 2 நிமிடம் மட்டுமே வாசித்து விட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை விட்டு வெளியேறினார்.
இந்நிகழ்விற்கு அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் எல்.முருகன் X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
மீண்டும் மீண்டும் – தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள், மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதைக் கூட செய்யமுடியாது என்ற தமிழக அரசின் ஆணவப்போக்கு மிகவும் கண்டனத்திற்கு உரியது.
தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், ஆளுநர் அவர்களை அருகில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்கிற அமைச்சர் போல செயல்படுகிறார்.
இது தான் ஜனநாயகமா?
இப்படித்தான் மக்கள் போற்றும் சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டுமா?
தேசிய கீதத்தைப் புறக்கணித்து, மாண்புமிகு ஆளுநரை அவமதித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா…?