ஆவின் அட்டையை பெறுவதற்கு நுகர்வோர்கள் மீண்டும் மீண்டும் நேரில் சென்று அடையாள அட்டையை காண்பித்து பெற்று கொள்ள கூடிய இக்கட்டான நிலையில் தான் உள்ளனர் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குற்றசாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
மீண்டும் ஆவின் அட்டை வழங்குவதில் கெடுபிடி. சில மாதங்களுக்கு முன்பு நுகர்வோரே ஒரு முறை நேரில் வந்து தங்களின் அடையாளத்தை உறுதி செய்தால் தான் அட்டை வழங்க முடியும் என்று கட்டாயப்படுத்தியதையடுத்து நேரில் சென்று பெற்றுக் கொண்ட நிலையில், மீண்டும் நேரில் வந்து அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
அடையாறு பூத் 27 நுகர்வோரை பெசன்ட்நகர் ஆவின் அலுவலகத்திற்கு வரவேண்டும் என நிர்ப்பந்திக்கிறார்கள். தொடர்ந்து பொது மக்களை அவதிக்குள்ளாக்குவது ஆவின் நிர்வாகத்தின் அநியாய செயல்பாடு. இது அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு தெரிந்து நடைபெறுகிறதா? அல்லது தெரியாமல் நடைபெறுகிறதா?
இது தான் திராவிட மாடலா?