தமிழகம் திமுக.,வால் தேய்கிறது; ஒரு குடும்பத்தால் அழிகிறது; கோபாலபுரம் குடும்பத்தால் பின்னோக்கி செல்கிறது. திமுக அப்புறப்படுத்தப்பட்டால் மட்டுமே தமிழகம் முழுமையான வளர்ச்சியை பெறும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பிரதமர் தமிழகம் வருவது உறுதி, அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதால் அதற்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும். அவர் வருவதற்கு முந்தைய தேதியில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் 234 தொகுதிகளையும் நிறைவு செய்துவிடுவோம். பல்லடத்தில் நிறைவு விழா நடைபெறுவது உறுதி, அதில் பிரதமர் மோடி பங்கேற்பார்.
காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கத்திற்கும் பா.ஜ.,வுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தேர்தல் நெருங்கும் சமயத்தில் சிலர் எங்கள் கட்சியிலும், சிலர் வேறு கட்சியிலும் சேர்வது வழக்கமானது தான். பலரும் பா.ஜ.,வில் இணைய உள்ளனர். எங்கள் கட்சிக்கு வருபவர்கள் அவர்களின் முந்தைய கட்சியை பற்றி விமர்சிக்க வேண்டாம். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த பத்திரங்கள் மூலம் பா.ஜ.,வுக்கு 52 சதவீதம் தான் நிதி வந்துள்ளது; ஆனால் திமுக.,வுக்கு 91 சதவீதம் நிதி வந்துள்ளது. இனி இதற்கு மாற்றாக தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் புதிய சட்டம் கொண்டுவந்து சரிசெய்யும்.
தமிழகம் திமுக.,வால் தேய்கிறது; ஒரு குடும்பத்தால் அழிகிறது; கோபாலபுரம் குடும்பத்தால் பின்னோக்கி செல்கிறது. இவர்கள் என்னதான் கூச்சல் குழப்பம் போட்டாலும், திமுக அப்புறப்படுத்தப்பட்டால் மட்டுமே தமிழகம் முழுமையான வளர்ச்சியை பெறும். இந்த பட்ஜெட்டை தவிர்த்து கடந்த 9 ஆண்டுகால மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது.
மத்திய அரசு அந்த தொகையை வழங்கவில்லை என மறுத்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுவாரா என நான் சவால் விடுகிறேன். எந்தவித ஏற்ற இறக்கமும் இல்லாமல் மோடி அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.