பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் அக்டோபர் மாதம் முதல் ஒரு குவிண்டால் கரும்புக்கு கொள்முதல் விலை 340 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது, இந்தக் கூட்டத்தில், 2024 – 2025 ஆம் ஆண்டு சர்க்கரைப் பருவத்திற்கான நியாயமான விலை நிர்ணயம் செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குவிண்டாலுக்கு 10.25 சதவீத சர்க்கரை மீட்பு விகிதத்தில் ரூ. 340 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது கரும்புக்கான வரலாற்று சிறப்புமிக்க விலையாகும். இது 2023-24க்கான கரும்புக்கான FRP-யை விட சுமார் 8 சதவீத அதிகமாகும். இது வரும் அக்டோர் மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த முடிவால் நாட்டில் உள்ள 5 கோடிக்கும் அதிகமான கரும்பு விவசாயிகள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது. கரும்பிலிருந்து 10.5 விழுக்காட்டிற்கும் அதிகமாக சர்க்கரை கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும். ஒவ்வொரு 0.1 சதவீத அதிகரிப்புக்கு, குவிண்டாலுக்கு ரூ.3.32 உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.