சமீபத்தில் நிஜாமாபாத் சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்சி) கவிதா, ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் ED மற்றும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் அமலாக்க இயக்குனரகத்தின் காவல் இன்றுடன் (மார்ச் 26) முடிவடைந்ததை அடுத்து, மதுக் கொள்கை வழக்கில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதாவை ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, மார்ச் 17ஆம் தேதி கைது செய்யப்பட்டதையடுத்து, ஏழு நாட்கள் ED காவலில் வைக்கப்பட்டார். ED காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
கவிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுதாரி, அவரது 16 வயது மகனின் தேர்வுகளை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் கோரி வாதிட்டார். ஆனால் அவரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
முன்னதாக, டெல்லி கலால் வரிக் கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கத்தில் ஆதரவைப் பெறுவதற்காக கவிதா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் சேர்ந்து சதி செய்ததாக ED குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.