செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ‘நீட்’ தேர்வு எழுத பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பல்லாவரம் மறைமலை அடிகள் பள்ளியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
2024-ம் ஆண்டு நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 510 மாணவர்கள் இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.அச்சிறுப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியங்களில் உள்ள மாணவர்களுக்கு அச்சிறுப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி நடைபெற உள்ளது.
அதேபோல் லத்தூர், மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ளமாணவர்களுக்கு மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், திருப்போரூர், திருக்கழுகுன்றம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள மாணவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாணவர்களுக்கு பல்லாவரம் மறைமலை அடிகள் பள்ளி மற்றும் தாம்பரம் மாநகராட்சி – சேலையூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி முகாம் காலை, 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மையங்களில் ‘நீட்’ பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் 340 மாணவர்கள் தினமும் பயிற்சிக்கு வருகை தருகின்றனர். பயிற்சியின் இறுதியில் மொத்தம் 3 மாதிரி தேர்வுகள் நடைபெறும் என்றார்.