பழனி கோவிலின் வருமானத்தை வேற்று மதத்தினருக்கு செலவிடாமல் பழனி வரும் பக்தர்களுக்கு அதிகமான பேருந்துகள், ஆம்புலன்ஸ் வசதி, இலவச தங்குமிடங்கள், அத்தியாவசிய வசதிகள் ஆகியவற்றை செய்து தர இந்து முன்னணி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பழனி திருக்கோவிலில் நீதிமன்ற உத்தரவின் படி கிரிவலப் பாதையில் எந்த வாகனமும் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகமே வாகனங்கள் வசதிகள் ஏற்பாடு செய்து தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த கையாலாகாத இந்து சமய அறநிலையத்துறை ஒரு மினி பஸ் மற்றும் 2 பேட்டரி கார்களை மட்டும் வைத்து பக்தர்களை வஞ்சித்து வந்தது. இது சம்பந்தமாக வசதிகள் ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் பல்லாயிரம் கோடி வருவாயை தன்னகத்தே வைத்திருக்கும் தேவஸ்தானம் கண்டு கொள்ளவே இல்லை. மாறாக இலவசமாக யாராவது பேருந்து வாங்கித் தருவார்களா? டீசல் போட்டு விடுவார்களா? என்று கையேந்தி நிற்கும் சூழலில் குமரன் தங்கமாளிகை உரிமையாளர் பரஞ்சோதி அவர்கள் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவசமாக மினிபஸ் ஒன்றினை வாங்கி கொடுத்தார். பழனி திருக்கோவில் வருவாயைக் கொண்டு தமிழகத்தில் உள்ள அத்தனை கோவில்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்து தரலாம். ஆனால் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் யாராவது இலவசமாக கொடுப்பார்களா என கையேந்தி நிற்கிறது பழனி தேவஸ்தானம்…
இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்து தருவதாக வெட்டி விளம்பரம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் துறையாக பழனி தேவஸ்தானம் இருப்பது அனைத்து பக்தர்களையும் வேதனைக்கு உள்ளாக்குகிறது. பழனி கோவிலின் வருமானத்தை வேற்று மதத்தினருக்கு செலவிடாமல் பழனி வரும் பக்தர்களுக்கு அதிகமான பேருந்துகள், ஆம்புலன்ஸ் வசதி, இலவச தங்குமிடங்கள், அத்தியாவசிய வசதிகள் ஆகியவற்றை செய்து தர இந்துமுன்னணி தமிழக அரசையும் இந்து சமய அறநிலைத்துறையையும் வலியுறுத்துகிறது…!!