கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இறுதியில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோனி பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெற இருக்கும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைப்பார் என சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் கோஷத்துடன் தோனியை வரவேற்றனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த சிஎஸ்கே அணிக்கு அதிரடி துவக்கம் அளித்த ரச்சின் ரவீந்திரா 8 பந்துகளில் 15 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் ருதுராஜ் கெய்க்வாட் நிதான ஆட்டம் ஆட அதிரடி ஆட்டம் ஆடிய டேரில் மிட்செல் 25, சிவம் துபே 28 .ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சரியாக சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் .தேவை என்ற நிலையில் சிவம் துபே ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசைப்படி ரவீந்திர ஜடேஜா களத்துக்கு வர வேண்டும். ஆனால், அவரை முந்திக் கொண்டு தோனி பேட்டிங் செய்ய வந்தார். வெற்றிக்கு 3 ரன்கள் தேவை, தோனி பேட்டிங் என்ற உடன் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். தோனி முந்தைய காலங்களைப் போல சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைக்கப் போகிறார் என்று அரங்கம் முழுவதும் தோனி தோனி என்று ரசிகர்கள் கத்தி கொண்டிருந்தனர். அந்த சத்தத்தால் தன்னுடைய இரண்டு காதுகளையும் மூடி கொண்டார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரஸல். இதுதொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
களத்தில் அரைசதம் அடித்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் இருந்தார். அவர் ஒரு ரன் எடுத்தார். அடுத்து தோனி சிக்ஸ் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து விட்டு கடைசி 1 ரன் தேவை எனும் நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். அவர் ஃபோர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.