மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ‘ரோடு ஷோ’ மூலம் மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வாகனத்தில் சென்ற அமித்ஷா, தாமரை சின்னத்தை காண்பித்தவாறு மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
கொடிகளை ஏந்தியவாறு உற்சாகத்துடன் கையசைக்கும் தொண்டர்களின் வரவேற்பை அமித்ஷா ஏற்று கொண்டார். மதுரை நேதாஜி சாலையில் முருகன் கோவில் அருகில் இருந்து தொடங்கிய வாகனப் பேரணி, ஆவணி மூல வீதி வழியாக சென்று நிறைவடைந்தது.
அப்போது பேசிய அவர், “மதுரை மக்களுக்கு எனது வணக்கம். மழையிலும் கூட மதுரை மக்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்து உள்ளீர்கள். தமிழகம் இம்முறை திமுக, அதிமுக இரு கூட்டணியையும், 40 தொகுதிகளிலும் கைவிட வேண்டும்.
அதிமுக, திமுக ஆட்சியில் நடந்த மாபெரும் ஊழல்களால், தமிழகம் வளர்ச்சி அடையவில்லை. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளார். தற்போது சரியான நேரம் வந்துவிட்டது. பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.
தமிழ் மற்றும் தமிழக வளர்ச்சி மீது பாஜக மட்டுமே அக்கறை காட்டுகிறது. தமிழகத்தின் பெருமையை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரதமர் மோடி பறைசாற்றி வருகிறார். என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்பதற்காக, உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்த தேர்தலில் தமிழ் மொழியில் பேச கற்றுக் கொள்வேன். தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மதுரை வேட்பாளர் பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசனை வெற்றி பெற செய்ய வேண்டும் என அமித்ஷா கேட்டுக்கொண்டார்.