சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்தியாவில் 88% இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக வெளியிட்ட அறிக்கையை உலக மக்கள் மத்தியில் தவறாக பரப்பும் சதித்திட்டமே என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில்,
சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்தியாவில் 88% இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. 15 – 29 வயத்துக்குட்பட்டவர்களை இளைஞர்கள் பட்டியலில் வைத்துள்ளது அந்த அமைப்பு. இந்த தரவுகள் தவறானவை என்றும் முறையாக அரசின் புள்ளிவிவரங்களை தெரிந்து கொள்ளாது உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் 35% இளைஞர்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்ற அடிப்படை உண்மையை கூட உணராமல் அல்லது மறைத்து இந்த அமைப்பு செயல்பட்டிருப்பது, அந்நிய அமைப்புகள் எப்படியெல்லாம் இந்தியா குறித்து தேர்தல் நேரத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புகின்றன என்பதை உணர்த்துகிறது.
மேலும், கடந்த 2022 ன் நிலவரப்படி 15-29 வயது வரை வேலை வாய்ப்பின்மை என்பது 5% தான் என்பது 30-59 வயது வரை வேலை வாய்ப்பின்மை 1% தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது உலக நாடுகள் பலவற்றோடு ஒப்பிடும் போது, குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பின்னர், மிகக் குறைவானது. ஆனால், வேண்டுமென்றே,உள்நோக்கத்தோடு இந்த அறிக்கையை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பது இந்தியாவின் நிலையான பொருளாதார நிலையை உலக மக்கள் மத்தியில் தவறாக பரப்பும் சதித்திட்டமே. கட்டமைப்புகளை பெருக்கி பொருளாதார முன்னேற்றத்தில் வேகமாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.