“90 சதவிகித மக்களுக்கு அநீதி நடக்கிறது!” — பிதற்றுகிறார் ராகுல் காந்தி !

“90 சதவிகித மக்களுக்கு அநீதி நடக்கிறது!” — பிதற்றுகிறார் ராகுல் காந்தி !

Share it if you like it

நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.”

“ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்தால், அப்படியான எக்ஸ்-ரே எடுத்தால், நாட்டில் ஓபிசி, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்தான் ஏழைகள் என்பது தெரியவரும்.”

“ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது எனது அரசியல் அல்ல, அது என் வாழ்க்கையின் நோக்கம்.”

“இன்று 90 சதவிகித இந்திய மக்களுக்கு அநீதி இழைக்கப் படுகிறது.”

”90 சதவிகித மக்களுக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும்.”

சுருக்கமாக, ராகுல் காந்தி சொன்னது இது: ‘இந்தியாவில் 100-க்கு 90 நபர்கள் ஏழைகள். அந்த 90 பேரும் ஓபிசி, பட்டியலின மற்றும் பழங்குடி ஜாதியினர். மீதி 10 சதவிகித மக்கள் வேறு ஜாதியினர், அவர்கள் ஏழைகள் அல்ல, அவர்களிடம் சொத்து சுகம் உள்ளது. நாட்டின் 90 சதவிகித மக்களுக்கு, அதாவது நாட்டின் ஏழை மக்களுக்கு, அந்த ஏழைகள் சார்ந்த ஜாதியினருக்கு, அநீதி நடக்கிறது. அதற்கான தீர்வின் முதல் படி, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு.’

ராகுல் காந்தி நேராகப் பேசவில்லை.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், நமது ஏழை மக்களுக்குக் கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம், சாலைகள், இருப்பிடம், என்று சீராக, படிப்படியாக, அடிப்படை வசதிகளை ஒரு அரசால் திட்டமிட்டு ஏற்படுத்தவே முடியாதா – மக்கள் நலனைக் குறிவைத்தும், பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு அங்கமாகவும்?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏதும் நடத்தாமல், உலகமே வியக்க 2021-ல் துவங்கி இந்திய மக்கள் அனைவருக்கும் இரண்டு வருடங்களில் நரேந்திர மோடி அரசு கொரோனா தடுப்பூசி வழங்கியதே? ஏதாவது புரிகிறதா, ராகுல் காந்திக்கு?

ராகுல் இப்படியாவது யோசித்தாரா? இதுவரை மொத்தமாக சுமார் 55 ஆண்டுகள் காங்கிரஸ் பிரதம மந்திரிகள் மத்திய அரசை வழிநடத்தினர். அவர்களில், ராகுல் காந்தியின் அப்பா, பாட்டி, கொள்ளுத் தாத்தா ஆகியோர் உண்டு. 55 ஆண்டுகால காங்கிரஸ் பிரதமர்களும், ஏழை மக்களைக் கைதூக்கிவிட ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் என்று புரியாமல், அதை நடத்தாமல், நாற்காலியைத் தேய்த்துவிட்டுப் போனார்களா?

இல்லையென்றால், கடைசி காங்கிரஸ் பிரதமரின் பதவிக் காலமும் முடிந்து, நரேந்திர மோடி 2014-ல் பிரதமர் ஆன பின்புதான் நாட்டில் ஏழைகள் தோன்ற ஆரம்பித்தார்களா, அவர்கள் விர்ரென்று அதிகரித்து 90 சதவிகிதம் ஆகிவிட்டனரா?

90 சதவிகித மக்கள் ஏழைகள், அவர்களுக்கு அநீதி நடக்கிறது, என்று பேசினால் என்ன அர்த்தம்? மீதி 10 சதவிகிதத்தினர் தான் அந்த 90 சதவிகித மக்களுக்கு அநீதி செய்கின்றனர் என்று அர்த்தமா? அல்லது, சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆனாலும், தங்கள் முயற்சியால், திறமையால் நமது அரசாங்கத்தையும் சகித்து அதோடு போராடி ஏழ்மையிலிருந்து மீள முடிந்தவர்கள் நாட்டில் 10 சதவிகிதத்தினர் தான், அந்த அளவுக்கு இந்திய அரசாங்கம் முன்னர் பல வருடங்களாகவே தூங்கியது, பொதுமக்களை உதாசீனம் செய்தது, என்று அர்த்தமா?

உண்மை என்னவென்றால், வலுவான அரசியல் தலைமை, தொலைநோக்குப் பார்வை, பயனுள்ள பொருளாதாரத் திட்டங்கள், திறமையான நேர்மையான நிர்வாகம், ஆகியவை நமது மத்திய அரசிலிருந்து நடுவில் பல வருடங்கள் காணாமல் போயின. பல மாநில அரசுகள் படு மோசம். இவைதான் நமது மக்கள் பின்தங்கி இருக்க முதன்மைக் காரணங்கள்.

சாதாரண இந்திய மக்கள் நல்லவர்கள், ஆனால் அப்பாவிகள். நமது அநேக அரசியல் தலைவர்களின் பதவிப் பித்தை, சுயலாபக் கணக்குகளை, சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இது ராகுல் காந்திக்கு ஒரு பலம்.

பொதுவாக இந்திய ஹிந்துக்களுக்கு மதத்தை விட, ஜாதியின் மீது பற்று அதிகம். ஜாதி அடிப்படையில் அவர்களிடம் அனுதாபம் காட்டுவது போல் அவர்களை அணுகி, “இந்தியாவில் நீங்கள் 90 சதவிகிதம். உங்களுக்கு அநீதி நடக்கிறது. மற்ற ஜாதியினருக்கு அநீதி நடக்கவில்லை. தேசத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுத்து, உங்கள் ஜாதியினர் அனைவரையும் அநீதியிலிருந்து மீட்டுக் கரையேற்ற நான் இருக்கிறேன்” என்று ஒரு தலைவர் சொன்னால் என்ன அர்த்தம்? அவர் பேசுவதின் அர்த்தம் விலாவாரியாக இதுதான்.

’90 சதவிகித மக்களே! மீதம் 10 சதவிகித மக்களிடம் இருக்கிற சொத்து சுகங்கள், உங்களிடம் இருப்பதை விட மிக அதிகம். அவர்கள் மட்டும் அப்படி முன்னேறியதால், அவர்களை அப்படி வளர விட்டதால், நீங்கள் ஏழைகளாக விடப் பட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்குச் செய்யப்பட்ட அநீதி.‘

’90 சதவிகித மக்களே! உங்கள் நிவர்த்திக்கான முதல் நடவடிக்கை, நாடு முழுவதுமான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு. என் தலைமையிலான மத்திய அரசு அதைச் செய்யும். உங்களில் யார் யார் என்ன ஜாதி, நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள், என்பதை ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காண்போம். மற்ற 10 சதவிகித மக்கள் யார் யார், அவர்கள் என்ன ஜாதி, எங்கு வசிக்கிறார்கள், அவர்களின் சொத்து சுகம் என்ன என்பதும் அந்த எக்ஸ்-ரே கணக்கெடுப்பில் தெரியும்.‘

’90 சதவிகித மக்கள், 10 சதவிகித மக்கள், இரு தரப்பினரையும் இப்படி அடையாளம் கண்டபின், இரண்டு பக்கத்து மனிதர்களின் சொத்து சுகங்கள் சமமாக அமையும்படி எனது அரசு தேவையானதைச் செய்யும் – அதாவது, அந்த 10 சதவிகித மக்களிடம் உள்ள சில சொத்துக்கள் உங்களிடம் லபக் என்று வந்து சேரலாம்’

இந்த ரீதியில் தனது பேச்சை அந்த சாதாரண மக்கள் புரிந்து கொள்ளட்டும் என்று அந்தத் தலைவர் நினைப்பதாக ஆகும். ‘மக்கள் எப்படியோ ஏமாந்து என் கட்சிக்கு ஓட்டளித்தால் சரிதான். நான் எப்படித்தான் பிரதமர் ஆவது?’ – என்றும் அந்தத் தலைவர் நினைப்பதாக ஆகும்.

பரிதாப நிலையில் உள்ள சாதாரண மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாமல், அதற்கான நல்லெண்ணமும் திராணியும் இல்லாமல், அவர்களை அந்தத் தலைவர் வஞ்சிக்க நினைப்பதாகவும் அர்த்தம். ராகுல் காந்தி வேறு மாதிரியாகவா நினைப்பார்?

ஆனால் ஒன்று. இந்தியாவில் நீங்கள் ஒரு ஜாதியைச் சேர்ந்தவராக இல்லாமல், ஜாதி ரீதியாக, ஜாதி அடிப்படையில், அந்த ஜாதி மக்களின் மனதை வசீகரிக்க முடியாது, அவர்களை நீங்கள் ஜாதி ரீதியாக அணுகி அவர்களின் ஜாதித் தலைவர் மாதிரி – அதுவும் ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கான ஜாதிகளின் தலைவர் மாதிரி – ஆக முடியாது. ஆகையால் ராகுல் காந்தியின் புதிய பித்துக்குளிப் பேச்சு அவருக்கு உதவாது.

இன்னொன்று. ஹிந்துக்கள் பொதுவாக விதியை நம்புகிறவர்கள். அசிரத்தையால் ஒரு அரசாங்கம் தங்களை வாட்டி வதைத்தாலும், யார் எப்படிப் பிழைத்தலும், பணம் சேர்த்தாலும், தங்கள் கஷ்டம், தங்கள் ஏழ்மை, ஆகியவை தங்களின் விதி வசம் என்று பொறுத்துப் போகிறவர்கள். அவர்களிடம் போய், “90 சதவிகித மக்களே! பத்து சதவிகிதம் உள்ள வேறு ஜாதி மக்கள் மட்டும் சொத்து சுகத்தோடு இருக்கிறார்கள். நீங்கள் எனக்கு ஓட்டுப் போட்டால், 90 மற்றும் 10 ஆகிய இரண்டு தரப்பினரையும் சொத்து சுகத்தில் ஒரே அளவுக்கு சமன் செய்கிறேன்” என்று பேசினால் அது எடுபடாது. ராகுல் காந்திக்கு இதுவும் புரியாதே?

Author:
R Veera Raghavan,
Advocate, Chennai


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *