கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடைகளில், மனிதர்கள் இறங்கும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் அடைப்பை நீக்கி, சுத்தம் செய்யும் பணிகளில், மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது; விஷ வாயுவால் பலியானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘சபாய் கர்மாச்சாரி அந்தோலன்’ என்ற அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்த தடை விதித்தது. இயந்திரங்களை, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தப்படுத்தும் அவலம் ஆங்காங்கே இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதனால், மரணமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
நீதிமன்றத்திலும் அவ்வப்போது இதுகுறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
கடந்த 2017ல் தொடரப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், நேற்று விசாரணைக்கு வந்த போது பிறப்பித்த உத்தரவு:
நாடு சுதந்திரம் அடைந்து, 46 ஆண்டுகளுக்கு பின், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, மனிதர்களை பயன்படுத்த தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. மனித தன்மையற்ற இந்த நடைமுறையை ஒழிக்க, சட்டத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
நீதிமன்றங்கள் பல உத்தரவுகளை பிறப்பித்தும், மனிதர்களை இந்தப் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்தும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இந்த நடைமுறையை முழுமையாக ஒழிக்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்த, அடைப்புகளை நீக்க, இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துவோருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். பலியாகும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, தற்போது, 30 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது; காயங்களுக்கு ஏற்ப, 20 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த இழப்பீட்டுத் தொகையை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகரிக்க வேண்டும். உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு கருணை வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.