திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது.
ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும் அகில பாரத கிராஹக் பஞ்சாயத் (ABGP) உள்ளிட்டோர் ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதன் எதிரொலியாக சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவையை திருவண்ணாமலை வரை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்தது.
இதையடுத்து, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இன்று(மே 3-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு மெமு ரயில் புறப்பட்டு சென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட ரயில் எஞ்ஜின் மீது மலர்களை தூவி ஆன்மிக அன்பர்கள், பொது நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிடோர் வழியனுப்பி வைத்தனர். ரயில் எஞ்ஜின் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு பயணிக்க கட்டணமாக ரூ.50 மட்டும் வசூலிக்கப்படுகிறது. அரசு பேருந்துகளுடன் ஒப்பிடும்போது நான்கில் ஒரு மடங்கு மட்டுமே உள்ளதால் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. எனவே, மின்சார ரயிலை தடையின்றி தொடர்ந்து இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளன.