வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர், அங்கு இயங்கும் அனைத்து வாகனங்களிலும் மோட்டார் வாகன விதிகளை மீறி போலீஸ், வழக்கறிஞர், பிரஸ், டாக்டர் போன்று பதவிகளை குறிப்பதற்கான ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இந்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். மனுவில், சென்னையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை என பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது.
இந்த உத்தரவு சென்னைக்குள் மட்டும் பொருந்துமா? அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா? என விளக்கப்படவில்லை. வாகனங்களின் முன்பக்கம், பின்பிக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஸ்டிக்கர்களாக ஒட்ட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று (மே 09) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.