விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் தீபாலட்சுமி (38). இவர் சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது தங்கை சண்முகப்ரியா, அதே பகுதியில் வசித்து வரும் லட்சுமி ஆகிய 3 பேரும் திருத்தங்கல் முத்துமாரி நகரைச் சேர்ந்த தவமுனியசாமி மகன் ஈஸ்வரபாண்டி என்ற முனீஸ்வரன் (44) என்பவரிடம், தலா ரூ.10 ஆயிரம் வார வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வட்டி கட்ட முடியாத நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் குமார் மனைவி வைரமணி (43) என்பவரிடம் தீபாலட்சுமி ரூ.10 ஆயிரமும், அவரது தங்கை சண்முகப்ரியா ரூ.30 ஆயிரமும், லட்சுமி ரூ.5 ஆயிரமும் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக பட்டாசு ஆலையில் வேலை இல்லாத நிலையில், வட்டி பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சம்பவத்தன்று இரவு தீபாலட்சுமி வீட்டிற்கு வந்த ஈஸ்வர பாண்டியன், வைரமணி ஆகியோர் வட்டிக்கு பணம் பெற்ற சண்முகப்ரியா, லட்சுமி ஆகியோரிடம் உடனே வட்டியுடன் சேர்த்து பணத்தை கொடுக்காவிட்டால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தீபலட்சுமி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, புகாரின் பேரில் போலீசார் ஈஸ்வரபாண்டி, வைரமணி ஆகியோரை கைது செய்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கந்து வட்டி கும்பல் மிரட்டியதால் ஆசிரியர் லிங்கம் குடும்பத்தில் 5 பேர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
சிவகாசி மீனம்பட்டியைச் சேர்ந்த தாய், மகள் இருவரும் கடன் கொடுத்தவர்களால் ஏற்பட்ட நெருக்கடியால் நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். கந்து வட்டி கும்பலால் சிவகாசி பகுதியில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.