திருவொற்றியூர் பகுதியில் உள்ள அம்சா தோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்த மதுமதி என்பவர் நேற்று, அவரது வீட்டில் அருகில் உள்ள உறவினருக்கு உணவு கொடுப்பதற்காக கொண்டு சென்றுக் கொண்டு இருந்தார்.
அப்போது ஆக்ரோஷமாக வந்த எருமை மாடு ஒன்று சாலையில் நடந்து சென்றுக் கொண்டு இருந்த மதுமதிவை மூட்டி தூக்கி தரதரவென இழுத்துச் சென்றது. இதனைப் பார்த்த அந்த பகுதியில் துணிகளை இஸ்திரி போடும் கடை வைத்திருக்கும் சந்திரசேகர் என்பவர் மதுமதியை காப்பாற்ற சென்றபோது அவரையும் மாடு தாக்கியுள்ளது.
மேலும் இதனை தடுக்க வந்த பலரையும் மாடு தாக்கியதாகத் தெரிகிறது. இதனையடுத்து எருமை மாடு முட்டி படுகாயம் அடைந்த மதுமதியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுமதிக்கு பரிசோதனை செய்ததில் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆழமாக உள்ளதால் 20 தையல் போடப்பட்டுள்ளதாகவும் தலையிலும் காயம் உள்ளதால் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அங்குள்ள தனியார் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் மாடு முட்டிய சம்பவங்கள் நடைபெற்று பொதுமக்கள் அச்சத்தில் இருந்துவரும் நிலையில் தற்போது திருவொற்றியூரில் 33 வயதுடைய மதுமதி என்ற பெண்ணை மாடு முட்டி தரதரவென்று இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபோல் நடப்பது முதல்முறை அல்ல. சமீபத்தில் பலமுறை இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. பொதுவெளியில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாடு இன்றி திரியும் மாடுகளால் ஆபத்து ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது.
இதேபோல் கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காந்திபுரம் 100 அடி சாலை. இந்த சாலையின் இரு புறங்களிலும் துணி மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே இரு புறங்களிலும் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அங்கு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டு மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். இது குறித்து பொதுமக்களும் வணிக நிறுவன உரிமையாளர்களும், பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால், மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அவ்வழியே நடந்து சென்ற இளம் பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது பெண்மணி பாதாள சாக்கடை குழிக்குள் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை குழியை மூடியதாக தகவக் வெளியாகி உள்ளது.