தோற்றம் : 26.06.1906
மறைவு : 03.10.1995
இயற்பெயர் : மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்
பிறப்பிடம் : சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன் குப்பம்
வாழ்வின் சிறப்புகள் : சிலம்புச் செல்வர் (வழங்கியவர் திரு.ரா.பி.சேது பிள்ளை) :
சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டங்கள்
மதுரைப் பல்கலைக் கழகம் பேரவைச்செல்வர்என்ற பட்டம்
மத்திய அரசு பத்மஸ்ரீ விருது
சிறு வயதில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். 1927ல் தமிழ்நாடு நாளிதழில் அச்சுக் கோப்பாளராக பணி செய்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை வாசம் அனுபவித்தார். காங்கிரஸ் இயக்கத்தில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். தனது 31 ம் வயதில் ராஜேஸ்வரி அம்மையாரை மணந்து. ஒரு மகனும். இரண்டு மகள்களும் வாரிசாகப் பெற்றார்.
இவரது நூல்கள் விவரம் : பூங்கொடி பதிப்பகம் இவர் எழுதியதை 60 புத்தகங்கள் மூலம் வெளியிட்டுள்ளது. பாரதி பற்றிய ஆராய்ச்சி நூல்களில் என்னை வளர்த்த பாரதி (2013) விக்கிரமன் மற்றும் நாகராஜனால் தொகுக்கப்பட்டது. சிலப்பதிகாரம் பற்றிய நூல்களில் அவர் எழுதிய வீரக்கண்ணகி (1958) சற்று பிரபலமாகப் பேசப்பட்டதாக அறிகிறோம். இன்றும் இவர் புகழை பறை சாற்றும் கப்பலோட்டிய சிதம்பரனார், கட்டபொம்மன், திருவள்ளுவர், இராமலிங்க அடிகள் மற்றும் சில ஆங்கில நூல்கள் என்றால் மிகையாகாது.
ம.பொ.சி தனி மனித வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கை பல்வேறு போராட்டங்களால் சூழப்பட்டது தான். இவர் தனது நூலுக்கு எனது போராட்டம் என்ற தலைப்பைத் தந்து அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். நாட்டுப் பற்றும், மொழிப்பற்றும் மற்றும் தெய்வப் பற்றும் கொண்டு மன நிறைவோடு பொது வாழ்க்கையை நடத்தும் பேற்றினை அவருக்குத் தந்தது.
1947ல் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு வி.வி.கிரி வெளியிட்ட எனது போராட்டம் என்ற நூல் அவரது வாழ்க்கையின் முதல் அறுபது ஆண்டு காலப் பகுதியைக் கொண்டதாகும். செங்கோல் வார இதழ் மூலம் 1967- 1987 கால இடைவெளி வாழ்க்கை நிலையை எழுதினாலும் அது வெளியிடப்படவில்லை.
இந்திய தேசியம், தமிழ் தேசியம், திராவிட தேசியம் எனும் அரசியல் கோட்பாடுகள் ஆய்வு செபயப்வர்களுக்கு எனது போராட்டம் என்ற நூல் அடித்தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
திருத்தணியைத் தமிழகத்துடன் சேர்க்க இவர் பட்ட பாடு மிகவும் கடினமானதோடு மட்டுமல்லாமல் அதில் வெற்றியும் கண்டார்.
வீர வழிபாட்டிற்குரிய தொல் பெரும் மரபைச் சார்ந்த தமிழ் மொழியை போர்க்கருவியாகக் கொண்டு அனைத்துப் போராட்டங்களிலும் குதித்தார். 1932 ல் தமிழா துள்ளியெழு என்ற கையெழுத்துப் பிரசுரத்தை திருவல்லிக் கேணி கடற்கரையில் பொது மக்களிடையே விநியோகம் செய்ததால் 30.9.1932 ல் இந்தப் பிரசுரம் சட்ட விரோதமானது என ஆங்கிலேயர்களால் கைது செய்யப் பட்டார்.
விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு போன்ற நூல்கள் இவருக்கு பெருமை தேடித் தந்தன. தமிழரசுக் கழகம் மூலம் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், தமிழினமே ஒன்றுபடு என்ற கொள்கையைப் பரப்பினார். அரசியலையும், இலக்கியத்தையும் இரு கண்களாகவே பாவித்தார்.
16.4.1947ல் சென்னை வானொலியில் இது இலக்கிய மறுமலர்ச்சிக் காலம். தமிழ் இலக்கியங்களில் புதுப்புது நூல்கள் வர வேண்டும் என்ற அவரது அவாவை தெரிவித்தார். புதுப்புது பிரச்னைகளுக்கு பொருத்தமான வழிநூல்கள் வர வேண்டும் என்றார்.
இவரது வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு நூலுக்கு 1966 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமியின் விருது வழங்கப்பட்டது. தமிழ் முரசு, தமிழன் குரல், இலக்கியப்பணியின் திரிசூலமாகும். செங்கோல் என்பது அவரது ஔவையார் பாடல் ஒன்றின் சமூகக் கண்ணோட்டத்தை பாட்டாளி அரசு என்ற கட்டுரையாக ஜனசக்தி இதழில் வெளியிட்டார்.
இவர் நூல்களின் எண்ணிக்கை சுமார் 140 மேற்பட்டதாகும். விடுதலைப் போரில் தமிழகம் (2 பாகங்கள்) 2000 பக்கமும், எனது போராட்டம் 1200 பக்கங்களும் கொண்டதாகும்.
இவரது அனைத்து நூல்களும் நாட்டுமையாக்கப்பட்டுள்ளது. பொய்யும் வழக்கும் புகுந்த காலத்தில் பிற நாட்டார் எழுதிய ஏடுகளைப் தொடாமல், சங்க காலத்தில் தோன்றிய புறநானூறு, அகநானூறு, திருக்குறள் போன்ற தமிழ் நூல்களில் காணப்படும் தமிழினத்திற்கே உரிய தனிப் பண்பாட்டை சுவைக்க வேண்டுமென விரும்பினார்.
வள்ளலார், பாரதியார், திரு.வி.க போன்றவர்களை இவர் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டார். வாழ் நாள் முழுதும் போராடி வென்ற ம.பொ.சி அவர்களை போற்றுவோம், என்றும் மறவோம்.
ஆதாரம் :பூங்கொடி பதிப்பகம் மற்றும் தமிழ் விக்கி
- Article by மு.வெ.சம்பத்