ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். இந்தக் கோயிலில் மூலவர்களாக பாலபத்திரர் அவரின் சகோதரர் ஜெகந்நாதர் சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது.
ஜெகநாதருக்கு 45 அடி உயர தேரும், பாலபத்திரருக்கு 44 அடி உயர தேரும், சுபத்ராவுக்கு 43 அடி உயர தேரும் உருவாக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்காக ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. ரதங்கள் ஜெகநாதர் கோயிலின் சிம்ம வாசல் முன் நிறுத்தப்பட்டு, பூரி ஜெகன்நாதரின் தோட்ட வீடு என்றும் அழைக்கப்படும் குண்டிச்சா கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.
இந்த நிலையில் ஒடிசாவில் மிகவும் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவிலின் ஆண்டு ரத யாத்திரை நேற்று மாலை துவங்கியது. லட்சக்கணக்கான மக்கள், ‘ஜெய் ஜெகன்நாத்’ என்ற கோஷங்களுடன் இதில் பங்கேற்றனர்.
ஒடிசாவில் ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக நடத்திய முதல் ரத யாத்திரை என்பதால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் அவரது அனைத்து கேபினட் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அஷ்வினி வைஸ்னவ் மற்றும் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மிகுந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பிரமாண்ட தேர்களை பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.
இந்த ரத யாத்திரையில் ஜனாதிபதி கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்.
விழாவை சுமூகமாக நடத்த கோவில் நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரத யாத்திரையில் கலந்துக்கொண்ட மக்களுக்கு இலவச உணவு, தண்ணீர் பாட்டில், வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் பதிவில், ஜெய் ஜெகநாத் ! புனித ரத யாத்திரையை முன்னிட்டு பூரியில் பலபத்ரா, அன்னை சுபத்ரா, மஹாபிரபு ஸ்ரீஜகந்நாதர் ஆகியோரின் தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்துச் சென்றதை தரிசித்த தெய்வீக அனுபவம் கிடைத்தது. பல நூற்றாண்டுகளாகப் பேணி வரும் இந்த ஆன்மிகத் திருவிழாவில் நானும் கலந்து கொண்டேன். பரம்பிரம்மம் எங்கும் வியாபித்திருப்பதை நான் உணர்ந்து கொள்ள இது ஒரு நல்ல தருணம். ஸ்ரீஜகந்நாதரின் அருளால் உலகம் முழுவதும் அமைதியும் வளமும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது மனப்பூர்வமான விருப்பம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.