சென்னை மேடவாக்கத்தில் கல்லூரி முன்பு மது குடித்துவிட்டு போதை ஆசாமிகள் அட்டுழியம் செய்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேடவாக்கத்தில் உள்ள கூட்ரோடு பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த கல்லூரி பக்கத்திலேயே அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த காலையிலே திறந்து வைத்து விடுவதால் அங்கு காலை முதலே மது அருந்த போதை ஆசாமிகள் வந்துவிடுகின்றனர். பின்னர் அங்கிருந்து மதுபாட்டிலை வாங்கி வந்து கல்லூரி வளாகத்திற்கு முன்பு குடித்துவிட்டு பாட்டிலை வீசுவது, சிறுநீர் கழிப்பது, கல்லூரிக்கு வரும் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களை பார்த்து விசிலடிப்பது கேலி கிண்டல் செய்வது, ஆபாசமாக பேசுவது, குடித்துவிட்டு ஆடைகள் இல்லாமல் ரோட்டில் படுத்து கிடப்பது என தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாக மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் கல்லூரி சென்று வரும் மாணவிகள் ஆசிரியைகள் தினமும் பயத்துடனே கல்லூரிக்கு சென்று வருகின்றனர். கல்லூரி பக்கத்திலே டாஸ்மாக் கடை இருந்தால் அங்கு படிக்கும் மாணவிகள் எப்படி நிம்மதியாக படிக்க முடியும். பெண்களுக்கு இலவசமாக பேருந்து விட்டால் மட்டும் போதாது. மாணவிகள் நிம்மதியாக படிப்பதற்கு வசதிகள் செய்து தர வேண்டும். அதற்கு டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்தும் டாஸ்மாக்கை மூடாத திமுக அரசு இந்த சம்பவத்திற்கு என்ன செய்ய போகிறது.