ஆவின் பால் பாக்கெட்டில் புழு இருந்ததை மேலாளருக்கே தெரியாமல் மூடி மறைத்து இந்த தகவல் வெளியானால் சம்பந்தப்பட்ட பால் முகவரை தொலைத்து விடுவோம் என மிரட்டியுள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி பரப்பரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
கோவை மாவட்டம், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் இல்லம் மற்றும் முன்னாள் சட்டபேரவை துணை சபாநாயகரான அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் இல்லம் அமைந்துள்ள சாலையில் நேற்று (17.07.2024) காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் டிலைட் பால் பாக்கெட்டில் புழு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை சம்பந்தப்பட்ட நுகர்வோரிடமிருந்து அப்பகுதி பால் பூத் முகவர் மூலம் கைப்பற்றிய ஆவின் தரக்கட்டுப்பாட்டு உதவி பொது மேலாளர் திருமதி. சுகன்யா, விற்பனை துணை மேலாளர் (பொறுப்பு) திரு. சாமிநாதன், பால் பண்ணை உதவிப் பொது மேலாளர் திரு. அனில்குமார் ஆகிய மூவரும் சேர்ந்து அதனை கோவை மாவட்ட ஆவின் பொது மேலாளர் டாக்டர் திரு. ஜெயராமன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மூடி மறைத்துள்ளதாகவும், இந்த தகவல் வெளியானால் சம்பந்தப்பட்ட பால் முகவரை தொலைத்து விடுவோம் என மிரட்டியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போல் கோவையில் இருந்து ஊட்டிக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள தேனீர் கடை ஒன்றிற்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் புழு இருந்த விவகாரம் மட்டுமின்றி, திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர் மொத்த பால் குளிரூட்டும் நிலையத்தில் பல ஆண்டுகாலமாக பாலினை திருடி, அதில் தண்ணீரை கலப்படம் செய்த தரம் குறைந்த பால் என்பதை தெரிந்தே கோவை மாவட்ட ஆவின் பால் பண்ணையில் அனுமதித்தது, பால் பாக்கெட்டுகள் உற்பத்தி சமயத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதால் பல ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போய் சாக்கடையில் வெளியேற்றியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தரக்கட்டுப்பாடு
உதவி பொது மேலாளரான சுகன்யா மீது இருக்கும் சூழலில் ஊட்டி சம்பவம் போல் தற்போது கோவையில் நடைபெற்ற சம்பவமும் ஆவின் பொது மேலாளர் டாக்டர் திரு. ஜெயராமன் அவர்களின் கவனத்திற்கு சென்றால் அவர் தங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து விடுவார், அப்படி நடவடிக்கை எடுத்து விட்டால் பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும் தங்களின் அரசியல் செல்வாக்கு, அதிகார பலம், பணபலம் ஆகியவற்றால் பணியிட மாற்றம் என்பதே காணாத தாங்கள் பணியிட மாறுதலுக்கும், நிர்வாக ரீதியான நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும் என்பதால் தற்போது நடந்த மனித தவறை கோவை மாவட்ட ஆவின் பொது மேலாளருக்கே தெரியாமல் தரக்கட்டுப்பாட்டு உதவி பொது மேலாளர், பால் பண்ணை உதவிப் பொது மேலாளர் மற்றும் விற்பனை துணை மேலாளர் பொறுப்பு) ஆகிய மூவரும் சேர்ந்து திட்டமிட்டு மூடி மறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது கோவை மாவட்ட ஆவின் பால் பண்ணை உதவி பொது மேலாளராக இருக்கும் திரு. அனில்குமார் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கூட அவர் மீது கோவை ஆவினில் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் அவரும் மூன்று பதவி உயர்வு பெற்று ஏற்கனவே ஆண்ட மற்றும் தற்போது ஆளுகின்ற அரசியல் கட்சிகளின் ஆதரவோடு சுமார் 32ஆண்டுகளாக கோவை ஆவினில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார்.
அது போலவே தற்போது கோவை மாவட்ட ஆவினில் தரக்கட்டுப்பாடு உதவி பொது மேலாளராக இருக்கும் சுகன்யா அவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கூட அவர் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சுமார் 9ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்ததில் இருந்து கடந்தாண்டு வரை இரண்டு பணி உயர்வு பெற்று, பணியில் சேர்ந்த கோவை மாவட்ட ஆவினினிலேயே பல ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். மேலும் தற்போதைய பொது மேலாளர் திரு. ஜெயராமன் அவர்கள் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகளை கலைந்து, ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்கிற முனைப்புடன் செயல்பட்டாலும் கூட அவருக்கு ஊழல் அதிகாரிகள் அரசியல் அழுத்தம் கொடுத்து வருவதால் அவரால் செயல்பட முடியவில்லை என தெரிகிறது. எனவே குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அருந்தும் பாலின் தரத்தில் கவனம் செலுத்தாமல் கோவை மாவட்ட ஆவினில் தொடர்ந்து
மெத்தனப் போக்கோடு செயல்பட்டு வருவதோடு, ஆவின் பாலின் தரத்தினை படுபாதளத்திற்கு கொண்டு செல்லும் தரக்கட்டுப்பாடு, பால் பண்ணை அதிகாரிகளான சுகன்யா, அனில்குமார், சாமிநாதன் ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்தும், ஆவின் பொது மேலாளர் திரு. ஜெயராமன் அவர்களுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கும் ஊழல், முறைகேடுகளுக்கு உள்ளான ஆவின் அதிகாரிகள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதோடு, கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலின் தரத்தினை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனவும், ஆவின் பால் பண்ணைகளில் தரக்கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்கவும், மூன்றாண்டுகளுக்கு மேல் ஆவினில் ஒரே மாவட்டத்தில் பணியில் உள்ள அதிகாரிகளை உடனடியாக கட்டாய பணியிட மாறுதல் மூலம் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
பின் குறிப்பு :- கடந்த 14ம் தேதி கோவையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்திக்கான கம்ப்ரசர் இயந்திரம் பழுதாகி பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு கோவை மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் சுமார் 4மணி நேரம் தாமதமாக நடைபெற்ற நிகழ்வைக் கூட இதே தரக்கட்டுப்பாடு மற்றும் பால் பண்ணை உதவி பொது மேலாளர்கள் இருவரும் பொது மேலாளர் டாக்டர் திரு. ஜெயராமன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைத்து விட்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது.